259
 

(ப. இ.) பொறைநிலையாகிய தாரணை என்பது மனத்தினை ஒரு வழி நிறுப்பதாகும். "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை" என்பதூஉங் காண்க. புலன்களைப் பற்றிக்கொள்ளும் பண்புவாய்ந்த மனத்தினைத் திருவருள் நினைவால் புலன்வழிப் புகவிடாதும் கீழ் நோக்கவிடாதும் புரிந்துகட்டுவதாகிய அடக்குதலைச் செய்தல் வேண்டும். அங்ஙனம் அடக்கியபின் உணர்வுக்கண்கொண்டு நடுநாடி வழியாகத் திருவருள் வெளியினை உற்றுநோக்குதல் வேண்டும். நோக்கினால் அகத்தே அறிவின்கண் கண் காது முதலிய கருவிகளின்றியே காண்டலும் கேட்டலும் ஆகும். அவற்றையே ஈண்டுக் காணாக்கண் கேளாச்செவி என ஓதப்பெற்றது. இம் முறையையே வாழ்நாளின் முடிவுபெறாமல் தடுக்கும்வழி யென்றோ தப்பட்டது. கோணாமனத்தை - புலன்வழியிற் போகாமனத்தை கீழ்க்கட்டி - கீழ் நோக்காதபடி தடுத்து; அல்லது கால் முதலான இடங்களில் நிறுத்தி. வீணாத்தண்டு - நடுநாடி. நோக்கி - பரவெளியை உற்றுப்பார்த்து. வாணாள் - அகவை (வயது). அடைக்கும் வழி - கழியாது தடுக்கும்வழி.

(அ. சி.) கோணா மனம் - எப்பொழுதும் கோணும் தன்மையுள்ள மனம். குறிக்கொண்டு கீழ்க்கட்டி - மூலத்துவாரத்தை முக்காரமிட்டு. வீணாத் தண்டூடே வெளியுற - வீணாத்தண்டின் துவாரத்தின் ஊடே வெள்ளியாகிய சுக்கிலம் உற. வாணாள் அடைக்கும் - வாழ்நாள் கழிந்து போகாதபடி காக்கும்.

(1)

569. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

(ப. இ.) நடுநாடியாகிய மேருமலையின் உச்சிக்கண் அருள்வெளி வாயிலாக வரும் தூய அமிழ்தம் ஆருயிர் உடம்பின்கண் அவ்வுயிர் வேண்டும் நாள்முழுவதும் இருத்தற்பொருட்டு நிலையாகப் பொழியும். நடுநாடிவழியாகச் சென்று திருவருள் வெளிக்கண் நிகழ்த்தும் சிவபெருமானின் திருக்கூத்தைக் காண்டல் எளிதாகும். கண்டனன் எனவும் ஓதினர். மலை - மேரு; நடுநாடி. வான்நீர் அருவி - பரவெளிக் கண்ணுள்ள திங்கள் மண்டிலத்திருந்து ஒழுகும் அமிழ்தம். சிலையார் பொது - பலவகை இயங்களின் இன்னொலி கேட்கப்படும் பரவெளி.

(அ. சி.) மலையார் சிரத்திடை - உச்சியிலுள்ள. வான்நீர் - ஆகாய அருவி என்கிற ஆனந்தக்கண்ணீர். நிலையார - தேகம் நிலைத்து நிற்க. நெடுநாடி - நீண்டு பரந்து கிடக்கும் நாடிகள். சிலையார் பொது - உயிருள்ள இடம், அஃதாவது உள்ளம். தொலையாத விட்டகலாத.

(2)

570. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை1
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.


1. முன்புதிருக். 12. கண்ணப்பர், 154.