(ப. இ.) பரியங்க யோகப்பயிற்சியால் பரவெளியை அறிந்து அருள் ஒளியை உணர்தல்வேண்டும். உணர்ந்தால் உணர்வோர் உள்ளம் அவ்வொளிக்கு அடிமையாகும். இதன் துணையால் திருவடி யுணர்வு தலைப்படும். அது தலைப்பட எல்லாம்வல்ல நந்தி வெளிப்படும். நந்தியருளாலே உணர்வு வெளியை - திருச்சிற்றம்பலத்தை உணர்தல் கூடும். அதுவே பேரின்பம். இப் பேரின்பினைக் காலமுண்டாக எய்தாமல் போனேன் என அவ் ஆவி வருந்தும். தெளிவு - திருவடியுணர்வு, வெளி - திருச்சிற்றம்பலம். (அ. சி.) உளி - மனம், முறி - அடிமை. மேல் - முன்னமேயே. (15) 820. மேலாந் தவத்தில் விரிந்தவ ராரெனின் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலா நிலத்தி னடுவான வப்பொருள் மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே. (ப. இ.) மேலாந்தலமாகிய சிவ உலகத்திலே அருளால் சென்று பொருந்தியவர் யாரென்றால்? ஆசான் மெய் (சுத்தவித்தை)க்கண் தங்கி இருக்கும் திருமால், நான்முகன், நந்தியெங் கடவுள் என்பவராவர். நாலாம் நிலம் என்று சொல்லப்படும் பேருறக்கமாகிய துரியநிலையின் நடுவில் செம்பொருளாகிய சிவம் தோன்றும். அச் சிவன் மின்னிடையாளாகிய திருவருளுக்கு முதல்வனாவன். (அ. சி.) நாலாநிலம் - துரியம். (16) 821. மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேன் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. (ப. இ.) மின்னிடையாளாகிய திருவருளும் மின்னானாகிய சிவ பெருமானும் ஒன்றியியைந்து பொன்னிடை வட்டமாகிய ஆயிரஇதழ்ப் பரவெளியில் எழுந்தருளுவன் அதற்காம் தவப்பயிற்சியைக் கைக்கொண்டவர், தம்முடனே தன்ஐ ஆகிய தலைவனைக் கூடியவராவர். அத்துணை வல்லார் இம் மண்ணிடைப் பல்லூழி வாழலுஞ் செய்வர். (அ. சி.) பொன்னிடை வட்டம் - பொன்போலும் ஒளியுள்ள சகசிர அறை. (17) 822. வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே. (ப. இ.) உள்ளுக்கு உயிர்ப்பினை இழுத்தலாகிய பூரகமும், வெளிவிடுதலாகிய இரேசகமும், உள்ளடக்கலாகிய கும்பகமும் முறையாகச் செய்யும் வழிவகை அறிவாரில்லை. அம் முறை அறிவார்கள்
|