4. நவகுண்டம் 991. நவகுண்ட மானவை நானுரை செய்யின் நவகுண்டத் துள்ளெழு நற்றீபந் தானும் நவகுண்டத் துள்ளெழு நன்மைகள் எல்லாம் நவகுண்ட மானவை நானுரைப் பேனே. (ப. இ.) அனல் ஓம்பும் குண்டங்கள் ஒன்பது. அதன் தன்மையைச் சொல்லுமிடத்து அதன்கண் சிவமாகிய பேரொளிப்பிழம்பு தோன்றாநிற்கும். எல்லா நன்மைகளும் அவ்வனல் ஓம்புதலால் உண்டாகும். அதன் விளக்கத்தை இனிக் கூறுவாம். நவம் - ஒன்பது. (1) 992. உரைத்திடுங் குண்டத்தின் உள்ளேமுக் காலும் நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. (ப. இ.) இவ் வனற்குண்டத்துள் மூன்று வரைகளாயுள்ள முக்கோணமும், அதைச் சூழ்ந்துள்ள நாற்கோணமும் அமைத்து அனல் ஓம்புக. அதனால் விளையும் நன்மைகள் ஐந்து. அவை, படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ப. மேலும் அவ்வனலால் பருமை, நுண்மை, முதன்மை என்னும் மும்மையுடல்களும் அகலும். மும்மையுடல்கள்: பூதம் ஐந்து, அறிகருவி ஐந்து, செய்கருவி ஐந்து. இப்பதினைந்தாலாயது பரியவுடம்பு. பூதமுதல் (தன் மாத்திரை) ஐந்து, மனம், எழுச்சி, இறுப்பு ஆகிய உட்கருவி மூன்றும் கூடிய எட்டும் நுண்ணுடம்பு. அவற்றோடு குணம் அல்லது மூலப் பகுதி ஒன்றுங்கூடி இருபத்துநான்கு மெய்யும் உடன்மெய் யாகும். பூதமொன்று, பூதமுதல் ஒன்று, அறிகருவி ஒன்று, செய்கருவி ஒன்று, அகக்கலன் ஒன்று, குணம் ஒன்று, மூலப் பகுதி ஒன்று, கலாதி ஒன்று ஆகிய எண்வகையாலாகியது முதன்மையுடல். முதன்மை எனினும் முதல்நிலை எனினும், காரணம் எனினும் ஒன்றே. மூவகையுடல் பற்றுகள் அகலும். அகல மிகுதியும் துன்புறுத்தும் வினைக்கட்டுக்களும் அகலும். அகலவே அவற்றை யறியாது சிவமே அறிந்திருப்பர். முக்காலும் என்பதை இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் கூறுதலும் உண்டு. (அ. சி.) முக்கால் - முக்கோணம். நன்மைகள் ஐந்து - ஆக்கலாதி ஐந்தொழில்கள் முப்புரம் - முச் சரீரம் (தூலம், சூக்குமம், காரணம்) - (2) 993. மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள் காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது நானறிந் துள்ளே நாடிக்கொண் டேனே. (ப. இ.) மேனிலை அறிந்து ஆருயிர்க்குள்ளேயே வெளி செய்தருளிய சிவனை, உயிர்ப்பாகிய மூச்சுப் பழக்கத்தால் உள்ளேயே நாடுக. அப்பொழுது சிவமாகிய செஞ்சுடர் விளங்கும். தாங்கும் நிலைக்களங்களை
|