(ப. இ.) அவ்வறுகோணத்தில் சிரீம் கிரீம் வரைந்து, அழகிய கோண ஆறின் உச்சியில் இரீங்காரமிடுக. அதன்மேல் எல்லாக் கோணமும் உள்ளடங்கும்படி அழகிய பெரிய வட்டம் இடுக. அதன்கண் பதினாறிதழ் வரைக. அப் பதினாறிதழிலும் அகர முதலிய உயிர் எழுத்துக்கள் பதினாறையும் மேல் வரைக. வட்கோணம்: வண் + கோணம் = அழகிய கோணம். (அ. சி.) வட்கோணம் - அழகிய அறுகோணம். ஈரெட்டக்கரம் - உயிர் பதினாறும். (இது திருமூலர் காலத்தில் உயிர் 16-ம் மெய் 35-ம் இருந்ததைக் குறிக்கின்றது.) அம் முதல் மேலிடு - பதினாறு இதழ்களிலும் அகர முதல் இடு. (6) 1288. இட்ட இதழ்கள் இடையந் தரத்திலே அட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேவிடே. (ப. இ.) மேற்கூறிய பதினாறு இதழ்களின் இடைவெளியில் பொருந்திய ஹவ்விட்டு அதன்மேலே உகரத்தை வரைந்து நெருங்கியிருக்கின்ற இதழ்களின் மேலே கிரோம், சிரோம் என வரைந்து இடப்புறத்திலே கிரோங்கு என்று வரைக. (அ. சி.) அந்தரம் - வெளி. அட்ட - பொருந்திய. உவ்விட்டு - உகரத்தை இட்டு. வாமத்து - இடப் பக்கத்தில். (கிரோம் - சிரோம் என்பன பீச எழுத்துக்கள்) (7) 1289. மேவிய சக்கர மீது வலத்திலே கோவை யடைவே குரோங்சிரோங் கென்றிட்டுத் தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப்பின் பூசியே. (ப. இ .) அமைத்த சக்கரமீது வலப்பக்கத்தில் மாலை போன்று குரோங் சிரோங்கென்று வரைக. சக்கரத்தைச் சூழ்ந்து குற்றமற்ற ரீங்காரம் வரைக. அதன்பின் நாகணவாய்ப் புள்ளினையொத்த உலக முதல்வியாகிய திருவருள் அம்மையைப் பூசிப்பாயாக. (அ. சி.) கோவை - மாலை பூவைப் புவனா பதியை - புவனாபதி என்ற சத்தியை. (பூவை - சத்தி..) (8) 1290. பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியான மதுசெய்யே (ப. இ.) திருவருளம்மையைப் பூசனை செய்யும்போது செம்பொருளாம் சிவனை மறவாத செம்மனத்தில் வெளிப்படுமாறு அழைத்துப் பின் கூறிய முறைப்படி வரையப்பட்ட சக்கரத்திலோ அமைக்கப்பட்ட
|