11. சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி) 1468. மேவிய சற்புத் திரமார்க்க மேதொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கஞ் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.1 (ப. இ.) தோழமை நெறியாகிய சகமார்க்கத்தை நிலைநிறுத்துவது மகன்மை நெறியாகிய சற்புத்திர மார்க்கமாகும். சகமார்க்கமாகிய அகத் தவமும் மனைத்தவமும் ஆகிய இரண்டும் காதன்மை நெறியாகிய சன்மார்க்க அடிப்படையாகும். அகத் தவம் - யோகம். மனைத் தவம் - சகத்தொழில். (அ. சி.) இம் மந்திரம் - சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம். ஒன்றுக்கொன்று அடிப்படை என்று கூறுகிறது. (1) 1469. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.2 (ப. இ.) மகன்மை நெறிநிற்பார்க்குத் திருமுறை வழியாக வழிபாடு செய்தலும், திருமுறை எழுதுதல் அதனை ஓதுதல். அறுவகைப் போற்றித் தொடர் புகன்று அருச்சித்தல், திருவைந்தெழுத்தைக் கணித்தல், ஆகியவையும் குற்றமறச் செய்யும் நற்றவமாகும். வாய்மையும் அழுக்காறின்மையும் கைக்கொள்ளவேண்டிய தூய்மைகளாகும். அன்பமைத்துப் படைப்புக் குழைத்தல் நைவேத்தியமாகும். திருமுழுக்கு முதலியன திருவுருவின்மாட்டுச் செய்தல் தூய்மையதாகும். இவற்றோடிணைந்த மற்றவையும் மகன்மை நெறியாகும். போற்றித்தொடர் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய போற்றித் திருத்தாண்டகம் ஐந்து, திருவாதவூரடிகள் பாடியருளிய போற்றித் திருவகவல் ஒன்று ஆக ஆறும் திருமுறைக்கண் தனிமுதன்மையாகக் காணப்படுகின்றன. இவை முறையே ஐந்தொழிற்றனிமைக்கும் ஒருங்காம் இனிமைக்கும் வாய்ப்பாக அமைந்த அருளிப்பாடாகும். தனித்தனி ஐந்தொழிற்கு முறையே பிள்ளையார், முருகவேள், ஆலமர் கடவுள், அம்மை, சிவக்கொழுந்து, ஆகிய ஐம்பெரும் படிமங்களுக்கும் ஆம். திருவாசகப் போற்றித் திருவகவல் ஐம்பெருந்தொழிலும் ஒருங்கு காணப்படும் அம்பலவாண அரும்பெரும் படிவத்துக்கு ஆம் போற்றித் திருத் தாண்டகங்களின் முதல் நினைப்பு முறையே வருமாறு: 1. பொறையுடைய. 2. எல்லாஞ், 3. பாட்டான, 4. வேற்றாகி, 5. கற்றவர்களுண்ணும் என்பனவாம். (2)
1. மனையறத்தி, 12. சம்பந்தர், 19. 2. மற்று நீ. 12. தடுத்தாட்கொண்ட, 70. " ஏடங்கை. 10. திருமந்திரம், 1043.
|