(ப. இ.) திருவடியுணர்வு ஆருயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ் வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும். அதுவே சிவ வுலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும். அவ் வுணர்வே சிவமாம் பெருவாழ்வையும் கூட்டுவிக்கும். (9) 1573. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. (ப. இ.) மேலோதிய திருவருள் ஆணையின்வழி ஆருயிர்கள் செம்மையுற ஒழுகாவிட்டால், பண்டைப் பழவினைகளாகிய எஞ்சு வினைகள் உள்ளத்தை மயக்கி ஆசைக்குழியுள் வீழ்த்திப் பிறப்பு இறப்பிற்படுத்தி மாயமதாக்கும். பால்போலும் பிறையினைச் சூடியருளிய திருமுடியினையுடைய அறிவுப் பேரொளிப் பெருமானாகிய சிவபெருமான் திருவடி சூட்டியவாறும், செந்நெறிக்கண் நிற்பித்தவாறும் திருவருளே. (10) 1574. கழலார் கமலத் திருவடி என்னும் நிழல்1 சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங் குழல்சேரும் மின்னுயிர்க் கூடுங் குலைத்ததே. (ப. இ.) ஆண்மை அடையாளக் கேண்மையாம் கழல் அணிந்துள்ள செந்தாமரையனைய திருவடி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் என்றும் பொன்றாப் பொருள் நிழல் சேரப்பெற்றேன். மேலும் நீண்ட திருமாலும் காணமுடியாத அழல்வண்ணமாய் எழுந்தருளி வெளிப்பட்டு நின்றவன் சிவன். அவனே உயிர்க்கு உயிராக நிற்பன். அங்ஙனம் நிற்கின்ற அவன் அம்மையோடும் கூடி அப்பனாகத் திகழ்வன். அதுவும் உயிருக்கு உயிராய் உணர்வின்கண் திகழ்வன். அந்நிலையில் என் உயிர் நிலைக்களமாம் உடம்பும் நீங்கிற்று. குழல் சேரும் மின்னும் - கரிய கூந்தலையுடைய மின்னொளி போலும் அம்மையும். கூடும்: என்பதன்கண் உள்ள உம்மையைப் பிரித்து மின் என்பதனொடு கூட்டுக. ஆதிப்பிரான்: ஆதியாகிய சிவன். (11) 1575. முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத்2 தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்3 குற்ற மற்றுநின் றாரே.
1. சுழலார். அப்பர், 4. 93 - 9. 2. என்னிலாரு " 5. 21 - 1. " தஞ்சாக. 11. ஐயடிகள், 22. " படிமுழுதும். " 10. 3. நாமார்க்கும். அப்பர், 6. 98. 1. " மூவுருவின். " " " 6.
|