1586. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால் வைத்த கலைகால் நான்மடங் கான்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. (ப. இ.) சிவதீக்கையுற்ற நன்னெறிச் செல்வர், பொறியாகிய முத்திரை (622, 1495) மூன்றினாலும் இடப்பால் வலப்பால் நடுநாடி ஆகிய மூன்றினும் செல்லும் உயிர்ப்பினில் வீணாக வெளியாகும். நால் விரல் அளவினை உள்நிறுத்தல் செய்வார். அங்ஙனம் செய்யும்படி பழக்கிய பேரின்பச் சிவகுரு பாதத்தே நிலைபெறுவர். அதனால் அவர் மலப் பிணிப்பு அறும். அவர்கள் பிறந்திறக்கும் பெருந்துன்பப் பெற்றியினின்று நீங்குவர். (அ. சி.) முத்திரை மூன்று - சாம்பவி முதலிய முத்திரை மூன்று. மூன்றின்பால் - இடகலை, பிங்கலை, சுழுமுனைகளில். வைத்த...மாற்றி - பிராணவாயு நாலு விரற்கடை வீணாக வெளிச்செல்லுதலைக் கும்பகத்தால் நிறுத்தி. பொத்த மறுத்தோர் - பெந்தம் என்பது வலிந்து வந்தது. பெந்தம் - பந்தம், பாசம் ஒழிந்துள்ளோர். (8) 1587. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. (ப. இ.) முன் ஓதிய காண்பன், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச்சிறப்பால் உள்ளங்கொள்கின்ற சிறந்த மெய்யுணர்வுடையோன் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட்கண்ணாற் கண்டு அம் மெய்ப்பொருளின் திருவடியிற் புகுவன், புகுந்த காரணத்தால் பருவுடம்பாகிய மூலப்பகுதியின் காரியங்கள் புடம்போட்ட பொன்போலவும் வேதித்த செம்புபோலவும் ஞானத்தின் திருவுருவாகும். அவனே சிவஞானி. பொறி - முத்திரை. (அ. சி.) மேலைச் சொரூபங்கள் - அறிவு, அறிபவன், அறியப்படுபவன். சத்திபாலித்த முத்திரை பற்றும் - சிவசத்தி அருளிய சாம்பவியாதி முத்திரைகளைப் பற்றுகின்ற. ஆலித்த...புகுந்து விரும்பிய நடனத்தின் வழியே ஞேயத்திலே படிந்து. அற்றமூலச் சொரூபன் - மூலப் பிரகிருதி அற்ற சரீரத்தையுடைய ஆன்மா. (9)
|