(ப. இ.) சிவகுருவால் ஆட்கொள்ளப்பட்ட வுயிர், பிறப்பு இறப்புத் துன்பங்களையும் அத் துன்பங்களினின்றும் விடுபடுதற்குரிய சிவ வழிபாடும் அக் குருவால் கேட்டு மகிழ்ந்தது. மகிழவே ஐம்புல ஆசைகள் அகன்றன. அதனால் ஐம்புலக் கள்வர் பற்றிப் பிடித்துச் செய்யும் துன்பங்கட்கு அவ்வுயிர் கடமைப்படாது நீங்கிற்று. அதனால் அத்தகைய வுயிர் வெற்றிப்பாடமைந்த ஆனேற்றையுடைய அண்ணலாகிய சிவபெருமான் திருவடியைக்கூடும். தாவில் தவஞ்செய்யும் தலைமையினை ஆயும்; எய்தும். (அ. சி.) கேடும் - தீயவை இன்ன என்றும், கடமையும் - அறங்கள் இன்ன என்றும், கேட்டு - உபதேசவாயிலாகக் கேட்டு, உவந்து - இன்பம் எய்தி, ஐவரும் நாடி வளைந்தது - ஐம்புல ஆசையால் விளைந்த பயனுக்கு. நான் கடவேன் அலேன் - நான் உட்பட்டவன் அல்லன். (5) 1593. உழவன் உழவுழ வானம் வழங்க உழவன் உழவினிற் 1பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்டு உழவன் அதனை யுழவொழிந் தானே.2 (ப. இ.) சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் நன்னெறி நான்மைப் பயிற்சியாம் உழவாகிய தொண்டினைச் செய்ய வானம் ஆகிய திருவருள் வெளியிலுறையும் சிவபெருமான் அருளாகிய மழையைப் பொழிய, தொண்ட வுழவர் ஆரத்தந்த அவ் வுழவினிற் செவ்விநோக்கி மலரும் குவளையாகிய திருவடியுணர்வு சிவஞானம் பூத்தது. உழவனாகிய மெய்த்தொண்டன், தன்னை விட்டு நீங்காது தன்னுடைய அன்பறிவாற்றல்களுக்கு உடன் துணைசெய்யும் சிவபெருமானின் அன்பு அறிவாற்றல்கள் அத் திருவடி யுணர்வை அருள் நோக்கம் செய்து காத்தளிக்குமென்று அத் திருவருள் பொறுப்பில் ஒப்புவித்து ஒழுக, அவன் செய்யும் திருத்தொண்டும் அருள் தொண்டாய் நிகழ்ந்தது. (அ. சி.) உழவன் - சரியையாதி நாற்பாதங்களில் பயிலும் பக்குவன். உழவு - பயிற்சி. வானம் - கருணை மழை. வேளை பூத்தது - வேளை ஒருவகைச் செடி. வேளை என்றால் காலத்துக்கும் ஒரு பெயர். பக்குவ காலத்தில் ஞானம் உண்டாயது என்பது பொருள். உழத்தியர் - அறிவு, இச்சை, செயல்கள். (6) 1594. மேல்துறந் தண்ணல் விளக்கொளி கூற்றுவன் நாள்துறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.
1. (பாடம்) பூத்தது வேளை. 2. மெய்ம்மையான். " 4. 76 - 2. " எய்யத், 11. நக்கீரர், ஈங்கோய்மலை எழுபது - 12. " கானமர். 8. திருக்கோவையார், 274. " துடியடியன. 12. கண்ணப்பர், 86. " செய்யுஞ். திருக்களிற்றுப்படியார், 21.
|