எய்தத் தொழுதலே நன்றென்று அவன் திருவடியிணையைப் புனலும் பூவும்கொண்டு நனவினும் கனவினும் மனமுறத் தொழுதனம். அங்ஙனம் தொழுதமையால் ஐம்புலனும் வென்றனம். வென்ற ஐம்புலனும் மிகக் கிடந்து இன்புறும்படி அப்பொழுதே ஆதிப்பிரான் அருள்செய்தனன். புலன்கள் ஆண்டவன் திரு ஆணைவழியே நிகழ்வன. (அ. சி.) இன்புற என்று அன்று - இன்பம் அடைக என்று அப்பொழுது. (3) 1745. மலர்ந்த வயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.1 (ப. இ.) மாலின் கொப்பூழில் தோன்றிய அயனும், அம் மாலாகிய அரியும், அரனும், ஆண்டானும், பயனருளும் அருளோனாகிய ஐம்முகனும், மேலாம் விந்து நாதங்களும், நன்மையருளும் சத்தி சிவன் வடிவங்களும் நிறைந்த குறைவிலா இன்பப் பயனுக்கு வாயிலாகிய பாடிப் பரவிப் பணியும் பணியாம் நற்றவத்தைத் தந்தருளும் நந்தியெம்பெருமானே. அவனே சிவலிங்கமுமாவன். (அ. சி.) மலர்ந்த - உலகமாகப் பரிணமித்த பிரகிருதி மாயைக்கு அதிபனான. பலந்தரும் ஐம்முகன் - முத்திப்பலனைக் கொடுக்கும் சதாசிவன். பலந்தரும் - ஐந்து மூர்த்திகளாயிருந்து அவ்வப் பயனை அளிக்கும். பராநந்தி - சிவலிங்கம் (இது ஞானலிங்கமாகிய சதாசிவத்தின் மேலாகிய இலிங்கம்). (4) 1746. மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்று ஆவி எழுமள 2வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித் தடக்கிற் பரகதி தானே. (ப. இ.) மூலத்திடத்திருந்து நடுநாடி வழியாகச் செல்லும் மூல அனலை எழுப்பி அவற்றொடு சென்று ஆவி உச்சித்துளையின் வழி வெளியேறுங்காறும் (என்பது இறக்குமளவும் என்று ஆகும்) ஆவி உடலோடுறையும் அக் காலங்களில் தொட்டுப் பொருந்திச் செய்யப்படுவனவும், விட்டு வருந்தித் தவிரப்படுவனவும் நூலுணர்வானும் நுண்ணுணர்வானும் உணர்ந்து உயிர்ப்பினை அடக்கி ஒழுகின் சிவன் திருவடிப்பேறாம் பரகதியுண்டாம். (அ. சி.) மேவி.....சுடர் வீணாத்தண்டு ஊடே செல்லும் செம்மையாகிய சோதி. ஆவி - உயிர். மேவப்படுவது - தழுவப்படுவது. விட்டு நிகழ்வது - ஒழிக்கப்படுவது. (5)
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2. 2. நாலுகரணங். 12. பெருமிழலை, 10.
|