714
 

அழகினையுடைய விழுமிய முழுமுதற் சிவனையும் இடையறாது அடியேன் வழிபடுவன்.

(அ. சி.) போகின்றுபதேசம் - முத்தி எய்துதற்குரிய உபதேசம்.

(1)

1814. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் 1அர்ச்சனை
ஓவற வுட்பூ சனை2செய்யில் உத்தமஞ்
சேவடி சேரல் செயலறல் தானே.

(ப. இ.) மெய்ப்பரனாகிய சிவபெருமானை அடைதற்குரிய அறிவினுள் அறிவாகிய ஞானத்தின் ஞானம் மேற்பட்டவிடத்துச் செய்யும் வழிபாடு ஞான பூசையாகும். அதுவே விழுமிய அருச்சனையாகும். இவ் வருச்சனையினை 'ஞான நூல்தனை, ஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றாம், ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில் ஞானபூசை' என்பர். இடையீடின்றித் திருவைந்தெழுத்தால் நெஞ்சம் பூசையிடமாகவும், கொப்பூழ் ஓம இடமாகவும், புருவநடு செம்பொருள் காணும் நிலைக்களமாகவும் கொண்டு புரிவது உட்பூசையாகிய அகவழிபாடாகும். இவ் வழிபாட்டில் உறைத்து நிற்போர் தலையாயவராவர். அந்நெறியில் திருவடி தலைக் கூடுதல் என்பது ஆருயிர் தன் செயல் அற்று இறைபணி நிற்றல்.

(அ. சி.) ஆவயின் - அவ்விடத்தில். செயல்அறல் - சரியை ஆதிகள் ஒழிதல்.

(2)

1815. உச்சியுங் காலையும் மாலையும் 3ஈசனை
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

(ப. இ.) காலை, உச்சி, மாலை என்னும் முப்பொழுதுகளிலும் சிவபெருமானை வழிபடுதற்குப் பேரன்பு கொள்ளுங்கள். 'நமசிவய' என்னும் நற்றமிழ்மறையே சிவன் திருப்பெயர். ஆதலால், பேரன்பு கொண்டு அத் திருவைந்தெழுத்தைப் புகழ்ந்து ஒதிப் போற்றுங்கள். சிவபெருமான் திருக்கண்களாக ஞாயிறு, திங்கள், தீ மூன்றும் சொல்லப்படும். அம் மூன்றினும் சிவபெருமான் திருவருள் ஒளி மேம்பட்டு விளங்கும் உண்மை அறிந்து சிவன் திருவுருவாக வழிபடுங்கள். அவன் திருப்பெயர் நந்தி நாயகன் என்று நவிலப்படும். முன்னெறியாகிய முதல்வன் முக்கண்ணனாவன். அவன் திருவடி சேர்ப்பிக்கும் நன்னெறியாவது நற்றமிழ் மறையாம் 'நமசிவய' வே.

(அ. சி.) விச்சுமின் - புகழுங்கள்.

(3)


1. ஞானநூ. சிவஞானசித்தியார், 8. 2 - 13.

2. அஞ்செழுத்தால். சிவஞானபோதம், 9. 3 - 1.

3. காலையே. 11. காரைக்காலம்மை, அற்புதத். 65.