1844. முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள் எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத் தெண்ணிரு நாலு திசையந் தரமொக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. (ப. இ.) முதன்மையாக ஒண்மையுடன் இருந்த சிவனடியாரைப் பதினெண்கணத்தவர் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் கைகூப்பித் தொழுவர். அவர்களே இந் நிலவுலகத்து வந்து சிறப்புடன் பூசையாற்றுவர். அவ் வழிபாடு தெளிந்த எட்டுத் திசையிலும் சேர்ந்து வழிபட, அவ் வழிபாட்டின் பயனாகப் பன்னிருகாத எல்லை சிவமணம் கமழும். அஃதாவது திருவெண்ணீறு, சிவமணி, திருவைந்தெழுத்துப் பயிலுவதால் அக்குறி சிவமாந்தலைவன் அருட்குறியாகிய வாய்மைக் குறியாகும். (அ. சி.) தெண் - தெளிவு. (14) 1845. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோருண் டாகும் நவயோகங் கைகூடு நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோக மாமே. (ப. இ.) சிவன் திருவடியை மறவா நினைவுடையோன் சிவயோகியாவன். சிவனிறைவில் அழுந்தித் தற்செயலற்றுச் செய்வனவெல்லாம் சிவன் செயலாப் புரிபவன் சிவஞானியாவன். அத்தகையோர் வாழும் நாடு சிவநாடு ஆகும். அந் நாட்டில் மெய்யுணர்வுடையோர் வாழ்வர். அங்குக் கேட்டைத் தரும் தீவினைகள் ஏதும் நிகழா. ஆண்டு அருளால் எய்தும் புதுமை யுண்டாகும். மேலும் எவ்வகையான நன்மையும் பெருகும். ஆண்டு வாழ்வோர் மீண்டும் பிறவார்; சிவவுலகம் உறுவர். (15) 1846. மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத் தமரர்கள் மேலுணர் வார்சிவன் மெய்யடி யார்களே. (ப. இ.) சிவபெருமான் திருவாணையால் உயிர்கட்கு உலகுடல்களைப் படைத்துக் கொடுத்தனன் அயன். அதுபோல் காத்தனன் அரியும். எனினும் அவர்கள் உணர்வெல்லாம் படைத்தல் காத்தலாகிய தொழிலே மேல் என்று உணர்ந்து உவகையுற்று நிற்கும். அதனால் சிவனை உணரார். இந் நிலவுலகத்து வாழும் மெய்யடியார் விரும்பியுணர்வது சிவனையே. அதனால் அவர்கள் சிவனடியார்கள் என்று எவரானும் என்றும் வழுத்தப்பெறுவர். (அ. சி.) மேலுணர்வு - மேலாகிய அறிவு. (16)
|