தத்துவ உண்மைகளை உணர்வர். உணரவே அவற்றின்கண் பற்று நீங்கும். தூமாயை, தூவாமாயை ஆகிய சுத்தம் அசுத்தங்கள் தொடரா முறைமையினை நன்கு நினைவர். நினையவே யாவர்க்கும் அத்தனாய் விளங்கும் சிவபெருமான் திருவடியை அடைந்து பேரின்பம் எய்துவர். இவ் வுண்மையினை விளக்குவது சித்தாந்தமாகும். (அ. சி.) நித்தம் - எப்போதும். தத்துவத்தால் - உண்மை தேர்தலால். (4) 2333. மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாவாறாறு ஓவும் பொழுதணு வொன்றுள தாகுமே. (ப. இ.) பொருந்திய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அதற்கப்பால் பொருந்திய பரவிந்து. பரநாதமும் விட்டு முப்பத்தாறு மெய்களும் கருத்தின்கண் நீங்கியபொழுது நிலைத்த ஆருயிரின் உண்மை நன்கு புலனாகும். (அ. சி.) விடா - விட்டு. ஓவும் - நீங்கும். (5) 2334. உள்ள வுயிராறாற தாகும் உபாதியைத் தெள்ளி யகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க வோருணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத் தெய்திடும் போதமே. (ப. இ.) மெய்களின் ஆய்வுமுறைமையால் உண்மை கண்டுள்ள ஆருயிர் முப்பத்தாறு மெய்களின் பிணிப்பினின்றும் விடுபடும். பிணிப்பு - உபாதி. விடுபட்ட தெளிவினால் நாதாந்தத்தைக் கடக்கும். அகவிருள் அகல அருளணர்வு தோன்றும். தோன்றவே குறைபாடில்லாத நாத முடிவில் எய்தும் நல்லறிவு கைவந்து பொருந்தும். மெய்கள் - தத்துவங்கள். (அ. சி.) செற்று - கடந்து. (6) 2335. தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடுஞ் சமாதியில் உற்றுப் படர்சிவன் பாடுறச் சிவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. (ப. இ.) ஆருயிர்க்கு நீங்கா உறுதிதரும் செயல் வகைகளை ஆராய்ந்து அல்லவற்றை அடக்குவதாகிய இயமமும் நல்லவற்றில் நடக்குவதாகிய நியமமும் கைக்கொண்டார் பின்பு அவற்றையுங் கடந்து செயலறுதலாகிய சமாதியை அடைவர். அம் முறையால் சிவபெருமானின் அருகு பொருந்துவர். ஆருயிர் சிவபெருமான் நிலையை எய்தப் பற்றற்ற நிலையிற் சாரும். அதுவே வேண்டுதல் வேண்டாமை இன்மை தலைப்படுதலாகும். தலைப்படுதல் - உபசாந்தம். இத் தலைப்பாடே யோகாந்தக் கொள்கையாகும். அடக்கலும் நடக்கலுமாகிய இயம நியமம் வருமாறு:
|