பிறப்பதற்கு வருவதோர் உடம்புமில்லை. இப்பொழுது தங்கியிருக்கும் உடம்பும் 'தூயவெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையும்' மேயதனால் தூயதாய்ச் சிவன் பணிக்குரிய சிவவுடம்பே யாகும். அதனால் அவ்வுடம்பு அவர்களுக்குரியதாயில்லை. சிவனினைவன்றிச் சேரும் எந் நினைவும் அவர்கள் பாலில்லை. மேலும் 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங், குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ' என்னும் செந்தமிழ்த் திருமறை முடிபின்படியும் அவ் வுடம்பு அவர்களுடையதாகவில்லை. (அ. சி.) மறைப்பொருள் - சிவம். (3) 2509. மோழை யடைந்து முழைதிறந் துளபுக்குக் கோழை யடைக்கின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாகுமே.1 (ப. இ.) புருவ நடுவண் தோன்றும் அருளமுத ஆற்றினை அடைந்து உச்சித்தொளையினை அருள்நினைவால் திறந்து அகத்தே புகுதல் வேண்டும். புகுந்தபின் அண்ணலாகிய சிவபெருமான் திருவடியிணையினை நீங்கா நினைவுடன் இருத்தல் வேண்டும். அந் நினைவு கோழையாகிய அறியாமையினை அடைக்கின்றதாகும். அவ்வடைப்பினின்றும் வெளிப்படாவாறு ஆழ அடைத்தல் வேண்டும். அடைத்தபின் அகத்தழல் மண்டிலத்தால் வேறு செய்தல் வேண்டும். அஃதாவது திருவைந்தெழுத்தினை உணர்வின்கண் உணர்வதாகிய தழலோம்பு நற்றவத்தினால் வேறு செய்தல் என்பதாகும். இதுவே அருளமுத யாறு தங்குவதற்குச் செய்யும் வழிமுறையாகும். அதுவே ஆருயிர்க் குறுதியாம் வலியுமாகும். (அ. சி.) மோழை - அமுதநதி. முழை - கபாலவாயில். கோழை அஞ்ஞானம். அண்ணற்குறிப்பு - சிவச்சிந்தையால். ஆழ அடைத்து - வெளிப்படாமல் செய்து. அனலிற் புறம்செய்து - தவத்தால் நீக்கி. தாழ - அமுதம் தங்க. (4) 2510. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாகுமே. (ப. இ.) ஆசூசமாகிய தீட்டுத்தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத் தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாகுவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரண முதலாகும் என்னும் உண்மை புலனாகும். (அ. சி.) ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாம் இடம். மானிடம் - மனிதசரீரம். (5)
1. வீழ்நாள். திருக்குறள், 38.
|