(ப. இ.) சிவபெருமான் ஆவிகளுக்குக் காணாத கண்ணாகிய அருட்கண் அளித்தனன். மேலும் கேளாத கேள்வியாகிய அறிவுப் பொறிமறை அருளினன். அஃதாவது சின்முத்திரை உபதேசம். குறைநிறைதலாகிய கோணலில்லாத சிவ வாழ்வினை அருளினன். போக்கும் வரவுமில்லாத பொருவறும் புணர்ப்பு அருளினன். இயற்கை நாணமாகிய அடிமைநிலை அருளினன். நாதமுடிவாகிய திருவடியுணர்வையும் சேர்த்தனன். இவை அனைத்தையும் காண்க என்று கண்டு காட்டினன். அவன் நந்தியெம்பெருமானவன். அறிவுப்பொறி - சின்முத்திரை. அஃதாவது பெருவிரலும் ஆட்காட்டி விரலும பிரிப் பின்றிப் புணர்ந்து ஒன்றாயநிற்க நடுவிரல், அணிவிரல், சிறுவிரல் மூன்றும் முறையே வினை மாயை ஆணவக் குறிப்புணர்த்தி நிற்பதாம். (அ. சி.) காணாத கண் - ஞானக் கண். கேளாத கேள்வி உபதேச மொழி. கோணாத போகம் - குறைதல் நிறைதல் இல்லாத சிவபோகம். கூடாத கூட்டம் - பிரிதலும் கூடுதலும் இல்லாத சேர்க்கை. நாணாத நாணம் - சொல்ல முடியாத வார்த்தை; ஆனால் நாணத்தால் அல்ல. இதனைத் தாயுமானவர்: "அவன் சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி சொன்னசொல் ஏதென்று சொல்வேன் - என்னைச் சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி முன்னிலை ஏதுமில் லாதே - சுக முற்றச்செய் தேஎனைப் பற்றிக்கொண்ட டாண்டி பற்றிய பற்றற உள்ளே - தன்னைப் பற்றச்சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி." என்ற விளக்கியுள்ளார். நாதாந்த போதம் - நாதமுடிவான ஞானம். (6) 1585. மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே. (ப. இ.) வாய்வாளாமையாகிய மோனம் கைவந்தோர்க்கு, திரு வடிப்பேறும் கிட்டும்; அவர்க்குச் சித்தியாகிய திருவருள் நிலையும் கைகூடும்; அவர்க்குச் சொல்லிறந்த மறையாகிய சிகரம் கைகூடும். இதனை அசபாமறை என்பர். இத் திறத்தார்க்கு ஐந்தொழிலும் ஆண்டவன் அருளால் செய்தல் கூடும். (அ. சி.) ஊமையாமொழி - பேசாத மந்திரம்; இதனை அசப மந்திரம் என்னும் கூறுப. ஊமை எழுத்து - பிரணவம். ஐங்கரும்-ஐந்தொழில்கள். (7)
|