734
 

நின்று சிவனை இடையறாது நினைக்கும் பேறுபெற்றவர் நன்மைமிக்க இயற்கைச் சைவத்தினை (1395) மேற்கொண்டவராவர். நவா: அந் அவா என்பது முதற் குறைந்து நவா என்றாயிற்று. பற்றற்ற என்பது பொருள். வேந்துறுப்புப் பத்து வருமாறு: 1. திருப்பெயர், 2. நாடு, 3. ஊர், 4. ஆறு, 5. மலை, 6. புரவி, 7. படை, 8. முரசு, 9. தார், 10. கொடி என்பன.

(அ. சி.) துவாதச மார்க்கம் - யோக மார்க்கம். சோடச மார்க்கம் - சரியையிற் சரியையாதி 16 மார்க்கம். ஈரை வகை அங்கம் - பத்து அங்கம். ஆறு - காமாதி ஆறு. நவா - அவா அற்ற.

(8)

1863. மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே.

(ப. இ.) மேலோதிய மோன முத்திரை நல்லுயிராகிய முத்தர்க்கு உரியது. நாதராகிய சிவகுருவினர்க்கு உரியது ஞான முத்திரை. செம்பொருட்டுணிவாம் சித்தாந்தச் செந்நெறியாளர் முத்திரை ஆன்சுரை முத்திரையாகும். ஆன்சுரை முத்திரை - தேனு முத்திரை. உயிர்ப்படங்கு முத்திரை கண்ட நெறிகள் இவை என்ப.

(அ. சி.) முத்தர்க்கு - சீவன் முத்தர்க்கு. நாதர்க்கு - குருவுக்கு. தேனிக்கு முத்திரை - தேனு முத்திரை அல்லது பசுமடி முத்திரை. கானிக்கும் - வாயு அடங்கும்.

(9)

1864. தூநெறி கண்ட சுவடு நடுவெழும்
பூநெறி கண்டது பொன்னக மாய்நிற்கும்
மேனெறி கண்டது வெண்மதி மேதினி
நீனெறி கண்டுள நின்மல னாகுமே.

(ப. இ.) தூய நெறியாகக் காணப்பெறும் உச்சித்துளை வழி, மேல் திகழும் ஆயிரம் இதழ்த் தாமரை அருள் வழியாகும். அருளால் அந்நெறி அழுந்திக் காண்பவரின் உள்ளமும் உடலும் பொன்வண்ணமாய்த் திகழும். மேல்நெறியாகக் காணப்படுவது திங்கள் மண்டிலமாகும். மேற்செல்லும் உயிர்ப்பு வழி கண்டவருள்ளம் மலமகன்று நலமுற்று நிலைநின்ற தூய்மையாகும்.

(அ. சி.) சுவடு-பிரம ரந்திரம். பூநெறி-சகசிர அறை; உச்சித் தாமரை. மதி மேதினி - சந்திர மண்டலம். நீனெறி - பிராணவாயு மேற்செல்லும் நெறி.

(10)