47
 

களவு கொண்டார் கைப்பொருள்போல் வளமறைத்து மருள் உணர்வினராய் இருள் மனத்தராய்க் காக்கை கரையாது கவர்ந்துண்ப தொத்து உண்பர் என்பதாம்.

(அ. சி.) அவரிவர் உயர்ந்தோர், தாழ்ந்தோர், உறவினர், பகைவர், நண்பர் முதலியோர்.

(1)

108. தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சிவ1 தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர2 னாமே.

(ப. இ.) தேவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கும் தலைமையராய்த் திகழ்வதை என்றும் இயல்பாக உடைய சிவபெருமான் அண்ணல் எனப்படுவன். அவன் தாள் பணியும் பேரன்பினர்தாம் ஆருயிர் அனைத்திற்கும் துன்பந்துடைத்து இன்பியற்றி இனிதுற வாழச் செய்யும் நிலைபேறாம் அறத்தினை அறிவர். அறிந்து மனமாசாம் அழுக்கா றவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் கடிந்து தம் தூயவுள்ளத்து அவ்வறத்தினைத் தாங்கி நிற்பர். அவர்களே சிவபெருமானின் பிறவா இறவா இயற்கைப் பேருண்மையினை இனிதினுணர்வர். அதனால் அவர் சிவத்தின் உண்மை உணர்ந்த சிவ தத்துவராவர். இவ்வுண்மைகளை அருளால் உணர்ந்தவர்களுக்கு என்றும் யாண்டும் புகலிடமாம் உரிமையுடைய தமர் சிவபெருமானேயாவன். சிவதத்தும் - சிவத்தின் உண்மை.

(அ. சி.) அறம் தாங்கி, நின்றார் - அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இல்லாதவர்.

(2)

109. யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை3
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை4 தானே.

(ப. இ.) எந்நிலையிலுள்ளார்க்கும் இன்பக் கூறாம் சிவனை அன்புடன் பச்சியிலையிட்டு வழிபடுதல் கூடும். பச்சிலையே செம்பைப் பொன்னாக்கும். அதுபோல் சிவ வழிபாடே ஆருயிரைச் சிவமாக்கும். அது போல் எல்லாராலும் ஆன்களுக்கு வாயுறையாகிய புல் முதலியன கொடுத்தல் இயலும். இது பொருட்கூறு ஆகும். இவ்வாயுறை கொடுப்பதன்கண் இருவேறு தொண்டுகள் அடங்கியுள்ளன. ஒன்று நந்தன வனத்துக்குக் களையெடுத்தல். மற்றொன்று பசுவினுக்குப் புற்கொடுத்தல். அதுபோல் யாவர்களாலும் உண்ணும்போது ஒரு கைப்பிடி யுணவு


1. (பாடம்) வார்சில.

2. அரியவற்று. திருக்குறள், 443.

3. நின்போ. அப்பர், 4. 12- 10.

" போதும் 11. பட்டினத்தார், திருக்கழு- 12.

4. இன்சொலால். திருக்குறள், 91.

" அல்லவை " 96.