560
 

(ப. இ.) முட்டாது முறைசெய்யும் முடியுடை வேந்தர் எண்ணிலாதவர்; கெடாத விழுத்தவவேந்தர் அளவிலாதவர். இவ்விரு திறத்தாரும் சிறந்த பெருமையுடைய சிவபெருமானை விரும்பிவழிபட்டு உய்ந்தனர். அளவிறந்த சித்தர்களும் தேவர்களும் மூவர்களும் அச் சிவபெருமானையே வழிபட்டுச் சிறப்பும் பெருமையும் சேரப்பெற்றனர். எல்லாரும் சிவபெருமான் திருவடியிணைக்கே தலையன்பூண்டு ஒழுகுவார். வீழ்ந்தனர் - விரும்பினர்.

(அ. சி.) ஒத்த செங்கோலார் - முடி அரசர்கள். உலப்பிலி மாதவர் - கேடில்லாத தவசிகள்.

(8)

1438. யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தகுகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.1

(ப. இ.) செறிவு நிலையாகிய யோகிக்குச் செறிவு, நோன்பு, சீலம் என்னும் மூன்றும் உள்ளன. அவர்கள் அம் மூன்றினையும்கொண்டு செலுத்துவோர் ஆவர். நோன்புநிலையாகிய கிரியையாளர் சீலம் என்று சொல்லப்படும் சரியைக்கும் உரியவராவர். ஆசையறுத்தவராகிய சீலத்தர் சரியை ஒன்றற்குமே உரியர். என்றும் பொன்றா ஒன்றாய் யாண்டும் இயற்கைப் பேரொளியாய் விளங்கும் சிவ சூரியன்பால் நீங்கா அன்பு வைத்தேனே.

(அ. சி.) தாகம் - ஆசை. ஆதித்தன் - சிவசூரியன்.

(9)

1439. யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

(ப. இ.) செறிவு நிலையாகி யோகத்தில் சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என நான்கு நிலைகள் உள்ளன. அவை முறையே சிவ நுழைவு சிவநோன்மை சிவநுண்மை சிவ நுகர்மை என அழைக்கப் பெறும். யோகத்தில் சமயம் பலவகையான யோக முறைகளை நினைத்தல். யோகத்தில் விசேடம் எட்டுறுப்புடன் கூடிய யோகம். யோகத்தில் நிருவாணம் முழுமுதற் சிவம் தோன்றல். யோகத்தில் அபிடேகம் சித்தி பெறுதல். உறுதல் : உறல்; உற்றல் என மிக்குநின்றது.

(அ. சி.) இம் மந்திரம் யோகத்தில், சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் இற்றென விளக்குகின்றது.

(10)


1. சகமார்க்கம். சிவஞான சித்தியார், 8. 2 - 21.