569
 

10. சகமார்க்கம்
(தோழமை நெறி)

1461. சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்து
உண்மார்க்க ஞானத் துறதியு மாமே.

(ப. இ.) சன்மார்க்கத்துக்கு வழியாக இருப்பது சகமார்க்கமாகும். சகமார்க்கம் எனினும் தோழமைநெறி எனினும் ஒன்றே. நிலைபேறாகவுள்ள தோழமை நெறியின்பயன் சிறந்த பேறாகிய சித்தியுள் நிலைப்பிப்பதாகும். நன்னெறி வாயிலாம் நானெறி விடுத்து ஏனைய நெறிகளில் உழல்வோர் நீங்காப் பிறப்பு இறப்புகளுக்கு உட்பட்டு அதுவே உறுதி எனத் திரிவர். ஆருயிர்களைத் தோழமை நெறியில் இருத்துதற்கு இருந்து காட்டியவர் நம்பி ஆருரர்.

(அ. சி.) சகமார்க்கம் - தோழனைப்போல் பத்தி பண்ணும் நெறி. மன் - பெருமை பொருந்திய. பின். மார்க்கம் - மேலே கூறிய நான்கு மார்க்கங்கள் அல்லாதது. உன் - அலைகிற.

(1)

1462. மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.1

(ப. இ.) செந்நெறி வகையாம் பன்னிரண்டு நிலைகளைக் கைக்கொள்ளாதார் சிவகுருவினையும் சிவன் திருவடிநீழற் பெருவாழ்வினையும் சிவனெறியினையும் மேற்கொண்டு பொருந்தார். இம்மூன்றும் பொருந்தாப் புன்னெறியினரைக் காணவும் திருமகள் அஞ்சுவள். அவர்க்குக் குடும்பமும் இல்லாதொழியும். அழகும் உறவும் பிறவும் ஒருங்கிழப்பர். பன்னிரண்டு நிலைகளுள் ஆறுநிலைகள் பற்றுக்கோடுள்ளன. ஏனை ஆறுநிலைகள் பற்றுக்கோடில்லன. இவற்றை முறையே பற்றுக்கோடி பற்றுக்கோடிலி எனப் பகர்வர். மூலம், அடிவயிறு, மேல்வயிறு, நெஞ்சம், கழுத்து, புருவநடு என்னும் ஆறும் ஆறாதாரம். ஞாயிற்று மண்டிலம் திங்கள் மண்டிலம், தீ மண்டிலம், சமனை, உன்மனை, அதீதம் என்னும் ஆறும் நிராதாரம். இவையே பன்னிரண்டு நிலைகளுமாகும். ஆதாரம் - பற்றுக்கோடி. நிராதாரம் - பற்றுக்கோடிலி.

(அ. சி.) துவாதச மார்க்கம் - பன்னிரண்டு ஆதாரங்களின் வழி - ஆதாரங்கள் 6. நிராதாரங்கள் 6. அவை மண்டலம் 3-ம், சமனை - உள்மனை, அதீதம் - 3-ம். சமயம் - சகமார்க்கம். திருமகள் வெருவும் - இலக்குமி அச்சப்படுவாள்.

(2)

1463. யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.


1. அவ்வித். திருக்குறள், 167.