642
 

கண்டிகை - 32 உருத்திராக்க மணிகள் கொண்ட மாலை. ஓதியவர்க்கும் - வேதங்கள் ஆகமங்கள் படித்தவர்க்கும். உருத்திரசாதனம் - உரு - உடல்; திரம் - உறுதி, 'உடலுக்கு உறுதியைத் தரக்கூடிய சாதனம்.'

(2)

1635. யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றஞ் சடையதொன்
றாகத்து நீறணி யாங்கக் கபாலஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

(ப. இ.) உட்கட்டாகிய கோவணமும், கஞ்சுளியாகிய போர்வையும், திருச்சடையின்கண் மயிலிறகாலாகிய குல்லாவும், முழுவுடம்பும் அணியும் திருவெண்ணீறும், கையில் மண்டையோடும், அழகிய வலத் திருக்கையில் பிரப்பங்கோலும் சிவயோகியின் அடையாளங்களாகும். சீலத்தின் அடிப்படை என்பதை விளக்கத் தாய்ச்சீலை என்றும் முதன்மைக்காவல் என்பதை விளக்கக் கோவணம் என்றும் அற்ற மறைக்கும் துணிக்குப் பெயராயின. கோஅரணம் கோவணம் என்றாயிற்று.

(அ. சி.) உட்கட்டு - கோவணம், கஞ்சுளி - பொக்கணம், மேற் போர்வை. தோகைக்குப் பாசம் - மயிலிறகால் ஆய குல்லா. (குப்பாயம் - குப்பாசம் என வந்தது. சகரம் யகரமானது போலி) சீகத்த மாத்திரை - அழகிய கையில் பிடிக்கும் கோல் (க என்னும் எழுத்துக்கு ஹ என்னும் ஒலி. வளாகம் - என்னும் சொல்லொலிபோல்.)

(3)

1636. காதணி குண்டலங் கண்டிகை நீறும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே.1

(ப. இ.) காதணியாகிய குண்டலமும், சிவமணியாலாகிய கண்டிகையும், ஓசை எழுப்பும் திருவைந்தெழுத்தும், வெண்சங்கும், மண்டையாகிய சட்டியும், திருநீற்றுமடலும், பாதக்குறடும், சிவயோகிக்குரிய அழகிய இருக்கையும், யோகப்பட்டமும், யோகத்தண்டும் என்னும் பத்து அடையாளங்களும் சிவயோகியர்க்கு உரியனவாகும்.

(அ. சி.) யோக அந்தம் - யோகத்துக்குரிய அழகிய. யோகப் படம் - யோகப்பட்டிகை. தண்டம் - யோக தண்டம்.

(4)


1. பத்துக்கொ. அப்பர், 4. 18 - 10.