அதனாலேயே பிள்ளைப்பேறு தவப்பேறென்ப. மேலும் கரு என்பதற்குக் காரணம் என்னும் பொருளும் உண்டு. தந்தையின் கருத்தே வித்தாய், காரணகாரிய விளைவாய் இவையனைத்தும் கற்பனையளவாகிய நினைப்புப்போல் அமையும் என்க. (அ. சி.) கருத்தது வித்தாய் - நாயகனது எண்ணமே குழந்தைக்கு மேல் அனுபவத்துக்குக் காரணமாய். கற்பனை - நாயகனது எண்ணம். (11) 1911. ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. (ப. இ.) விந்துவானது மூலத்துள் இயற்கையழலால் வற்றப்பட்டு உடலுடன் கலந்து கரைந்துவிடுதல் வேண்டும். அவ்வாறு உடலுடன் ஒன்றாய் விந்து விலகாது வேறிடம் செல்லாது நிற்பின் விரைவில் உயிர் அழியாது. அளவிறந்த வலுவுண்டாம். ஆற்றலும் நீங்காது. நல்லறிவு, தவம், திருவைந்தெழுத் தெண்ணலாகிய சிவம், வாய்வாளாமை, அழியாத எண்பெரும்சித்தி யாவும் அருளால் உண்டாகும். கற்பானுடைய முயற்சியும் நினைவும் தெளிவும் அவனுக்குப் புலவன் என்னும் பொருவில் பட்டம் வழங்குதற்குக் கருவியாகும். எனினும் அக் கருவிகளே பட்டம் வழங்கா. அக் கருவிக்குரிய கற்றோனும் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளான். வினவித் தேர்ந்து நினைவுற்று நடுநிற்கும் சான்றோரே பட்டத்தினை வழங்குவர். அதுபோல் திருவருளாற்றலே அனைத்தினையும் கைகூடச்செய்யும். (12) 1912. வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழியனல் சொருகிச் சுடருற்று முற்று மதியத் தமுதை முறைமுறை செற்றுண் பவரே சிவயோகி யாரே. (ப. இ.) மூலத்து அனலைக் கொளுத்தி விந்துவினை வற்றச்செய்து அவ் விந்துவினைக் கீழ்நோக்கவொட்டாது தடுத்து மேல்நோக்கி ஏற்றிப் பொருந்திய புருவநடுவாம் சுழியின்கண் நிறுத்தி ஒளிபெற்றுத் திங்கள் மண்டிலத்து முழுமதி அமிழ்தினை முறைமுறை பிழிந்து நுகர்ந்து அதுவே உணவாய் உடலை வளர்த்து அருளால் ஊழியும் அழியாமல் இருப்பவர் சிவயோகி என்று சிறப்பித்து அழைக்கப்பெறும் அகத்தவத்தோர் ஆவர். (அ. சி.) மறித்து ஏற்றி - விந்துவைக் கீழ்நோக்க விடாமல் தடுத்து மேல் ஏற்றி. துற்றசுழி - ஆஞ்ஞை. (13) 1913. யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தர னாவோனும் மோக முறினு முரையமிர் துண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே.
|