32. முத்தியுடைமை 2587. முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த 1போதரே. (ப. இ.ஒட்டாகிய வீடுபேறு முத்தி எனப்படும். அப் வொட்டின்கண் அத்தனாகிய சிவபெருமானின் முழுத்த திருவருள் பெறுதல் இயல்பகும். அங்ஙனம் பெற்ற திருவருளால் முப்பத்தாறு மெய்களும் நமக்கு வேறெனவும் கருவியெனவும் அவை ஆண்டவன் உரிமை எனவும் மீண்டும் அதன்பால் வருதல் வேண்டத்தக்கதன்றெனவும் அருளால் கண்டு உண்மை யுணர்தல் தத்துவ சுத்தியாகும். அந் நிலையினைத் தலைப்பட்டவர் செய்யும் பணிகளெல்லாம் சிவப்பணியாகும். தன்பணி - சிவப்பணி. அப் பணியே மெய்த்தவமாகும். அச் செய்கையால் இருவினை அகலும். அகலவே உண்மைப் பத்தியுண்டாகும். அத்தகைய பத்தியிலுற்றோர் பேரின்பப் பேரறிவினராவர். தன்-சிவன். (அ. சி.) தத்துவசுத்தி தலைப்பட்டு-தத்துவங்கள் 36-ம் வேறு என்று அறிந்து நீங்கி. தன்பணி-சிவப்பணி. (1) 2588. வளங்கனி 2தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங்கொண்ட நால்வரும் நாடுகின் 3றாரே. (ப. இ.) ஆருயிர்களை வலிய இருபெருந்தாள்களையுடைய அரிய பறவையாக உருவகஞ் செய்தனர். இருகால்கள் என்பது உழைப்பும் ஒடுக்கமும் ஆகும். வளப்பமிக்க திருவடிப்பேறாகிய (2649) கனியைத் தேடிய ஆருயிர்கள் உள்ளங்கனிந்து ஓவாது திரியும். அங்ஙனம் திரியும்போது கள்ளம் கனிந்த காம வான்சுறவின் வாய்ப்பட்டு விட்டிலுக்கு முன் விழைவினை உண்டாக்கிப் பின் இழவினைத்தரும் விளக்கினைப்போல் வருத்தங் கொடுக்கும் உலகியற்பற்றாம் கைவிளக்கினை ஏற்றி எண்ணம் மனம் இறுப்பு என்னும் நால்வரும் (அந்தக்கரணங்கள்) அவ்வுயிரைத் தன் வழிக்கு இழுக்க நாடுகின்றனர். அங்கி - ஈண்டு விளக்கு. (அ. சி.) வளங்கனி - முத்தி. பறவை - சீவன். உளங்கனி - உள்ளங்கனிந்து. களம் கணி - கள்ளம் கனிந்த. அங்கி - தீபோலும் வருத்தம் செய்யும் உலக வியாபாரங்களில். நால்வர் - அந்தக்கரணங்கள். (2)
1. தவஞ்செய்வார். திருக்குறள், 265. 2. கற்றவர் விழுங்கும். 9. சேந்தனார், 2. 3. தனியனேன். 8. சுட்டறுத்தல், 27.
|