1077
 

(ப. இ.) மெய்யுணர்ந்தார் நாதனாகிய சிவபெருமானை இடையறாது படர்ந்து விலக்குறும் எத்தகைய இடையூறுகளையும் நீக்கிக் கொள்வர். சிவபெருமானையே அவனருளால் உணர்விற் கூடிக்கொண்டிருப்பர் மெய்யுணர்வினர். அதனால் நிகழ்வாகிய ஏறுவினை ஏற்றம் ஏலாதொழிந்தனர். உலகியல் ஆடம்பரங்கள் தங்கள் உள்ளத்தில் தலைதூக்குவனவாகிய திகழ்வினை யொழிந்தனர். திருவடிப் பேற்றினுக்குரிய செந்நெறி- சித்தாந்த நன்னெறி - செந்தமிழ்ப் பெருநெறியினை நடு நிலையாளர் அனைவரும் மெய்ம்மையோடு புகழ்வர், அதனால் அப் புகழ் வழியினை உலகிடை நாட்டித் திருவடிப் பேறாஞ் 'செல்வன் கழலேத்தும் செல்வ'த்தினைப் புகுந்து நின்றார் என்க.

(அ. சி.) நகழ்வு - விலகுதல். நிகழ்வு - உலக வியாபாரம். தகழ்வு - வீண் ஆடம்பரம். புகழ்வழி - புகழ்தற்குரிய முத்திநெறி.

(13)

2621. வந்த மரகத மாணிக்க ரேகைபோற்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை யிலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியு மாகுமே.

(ப. இ.) மரகதமாகிய பச்சைமணி, மருள் நிலைக்கு ஒப்பாகும். அப் பச்சைமணியின்கண் செம்மணிக்கதிர் பாய்வது மருளின்கண் அருள்கதிர் பாய்ந்து ஆருயிரின் அறியாமையை அகற்றுவதை யொக்கும். அத்தகைய அருமறை மொழியினை மெய்க்குரவன் அருளும் மெய்ந் நெறிக்கண் அவனருளித் தந்திடுவான். சந்திடும் - தந்திடும். மெய்க்குரவன் திருவருளால் தந்தருளப்பெறும் திருவைந்தெழுத்தாகிய அருமறைக் கதிர் நெற்றியின்கண் மூக்கின் மூலமாகிய புருவ நடுவில் ஊடுருவி ஒளிரும். அதுவே அழகிய ஒளிகட், கெல்லாம் ஒளிகொடுத்துக் கொண்டொளிரும் அருளொளியாகும்.

(அ. சி.) வந்த...போல் - மரகதத்தில் வந்த மாணிக்க ரேகை, அஞ்ஞானத்திடையில் உண்டான ஞான ஒளி. சந்திடு - தெரிவிக்கும். இலாடம் - நெற்றி. மூலம் - நாசியின் மூலமாகிய புருவநடு.

(14)

2622. உண்ணும்நன் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணுநன் நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மிலதாம் வெளியானோர் மேனியே.

(ப. இ.) நற்றவ (2615) நான்மையுள்ளும் மூன்றாம் நிலை செறிவு நிலையாகும். அந்நிலையையே சிவயோகம் எனவும் மாயோகம் எனவுங் கூறுப அத்தகைய செறிவுநிலைக்காட்சியர், அறிவுக் கண்ணிற் புலனாகும் கடவுளர் மாயோகக் கடவுளராவர் அவர் கலப்புத் தன்மையால் உண்ணும் வாயின்கண்ணும், அவ்வாயுறுப்பினையுடைய உறுப்பியாகிய உடம்பின் கண்ணும். அவ்வாய்ப்பயன் கொள்ளும் உயிரின்கண்ணும், பயன் விளை புலனாம் மண் நீர் அனல் கால் வானம் ஆகிய ஐம்பூதங்களின் கண்ணும் பிரிப்பின்றிக் கலந்து நின்றருள்கின்றனர். பூதவெளியாகிய விண்ணையும்