1125
 

நாடுமின். நாதமுடிவாகிய நம்பெருமான் மிக்க உகப்புடன் திருக்கூத்தாடும் இடம் அதுவாகும். அதுவே திருவம்பலமாகும். திருவம்பலம் - தில்லைத் திருச்சிற்றம்பலம்.

(அ. சி.) உயிர் - பிராணவாயு.

(3)

2719. வளிமேக மின்வில்லு வானக வோசை
தெளிய விசும்பில் திகழ்தரு வாறுபோல்
களியொளி யாறுங் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே.

(ப. இ.) வானத்தின்கண் காற்று வீசுகின்றது. மேகம் தவழ்கின்றது. மின்னல் மின்னுகின்றது. வானவில் தோன்றுகின்றது. ஓசை எழுகின்றது. இவற்றிற்கெல்லாம் வானம் இடங்கொடுப்பினும் அவ்வானம் இவற்றினால் தொடக்குண்ணாது வேறாகத் தனித்துநின்று திகழ்கின்றது. அதுபோன்று சிவபெருமானும் களிப்பினைத் தரும் ஒளிகள் ஆறுடனும் கலந்து அவற்றிற்கும் ஒளிகொடுத்து நிற்கின்றனன். அங்ஙனம் நிற்பினும் தான் தனிப் பேரறிவொளி வடிவாய், மறைந்து நின்றருள்கின்றனன். அறுவகையொளி: அகநிலை ஆதாரங்கள் ஆறினும் காணப்படும் அருள்விளக்கவொளி, ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகக் காணப்படும் அறிவொளி. 'அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்'த் தோன்றும் சமயவொளி.

(அ. சி.) களியொளி ஆறும் - மேலான தூவொளி முதலிய ஆறு ஒளிகளும்.

(4)

2720. தீமுதல் ஐந்துந் திசையெட்டுங் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புறம் ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடஞ்செய்யும் 1மாறன்றே.

(ப. இ.) ஐம்பெரும் பூதங்களினுள் ஒளியுருவாய் நடுநின்று ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஒளிதருவது தீ. அத் தீ ஒளியால் புறவிருளைப் போக்குகின்றது. சூட்டால் வெப்பத்தையும் உணா முதலியவற்றைப் பதஞ் செய்வதையும் புரிகின்றது. அதுபோல் சிவபெருமான் அறிவொளியையும் அருட்பதத்தையும் புரிந்தருளுகின்றனன். அம்முறையால் தீ அவனுக்கு ஒருபுடையொப்பாகும். அத்தகைய தீ முதலிய பெரும் பூதங்கள் ஐந்தும், திசை எட்டும், கீழும் மேலும் ஆகிய பத்துப்புலனும் நிலைக்களனாகக் கொண்டு ஆயும் ஆருயிரின் அறிவினுக்கு அப்புறமாகக் காணப்படுவது திருவடிப் பேரின்பம் தூவாமாயை தூமாயை என்று சொல்லப்படும் மாயை மாமாயையைக் கடந்துநின்ற மெய்யுணர்வினர் அறிவுக்கண்கொண்டு காணுமாறு நாயகன் நீங்காதுநின்று நடஞ்செய்தருளுகின்றனன். இதுவே அம்பலவாணன் இம்பரிடையும் ஆருயிரின் அகத்திடையும் அறிவிடையும் இடையறாது செய்து போதரும் திருவருட்கூத்தாகும்.

(அ. சி.) தீ முதல் ஐந்தும் - ஐந்து பூதங்களும்.

(5)


1. மாயைமா. சிவப்பிரகாசம், 70.