1174
 

(ப. இ.) உடம்பினகத்து ஆறு நிலைகள் உள்ளன. இவற்றை ஆறு ஆதாரங்கள் என்ப. அவை, மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பன. இத்தகைய ஆறு தெருவில் அகப்பாட்டுச் சந்தி என்று சொல்லப்படும் மூலாதாரத்தில் தேன்போல் இனிமை தரும் சாறுமிக்க நான்கு பனைகள் உள்ளன. ஈண்டுப் பனையென்றது மூலாதாரத்தில் காணப்படும் நான்கிதழ்த் தாமரையை. புறக்காலால் ஏணி வைத்து எட்ட முடியாத வொன்றென்க. ஆனால் அகக்காலால் எட்ட முடியும். அகக்கால்: உயிர்ப்பு; பிராணவாயு. ஏணி என்பது சுழுமுனையாகிய நடுநாடி என்ப. அவ் வேணியினை அருளால் அமைத்து அப்பன் திருவடிக்கண் பொருந்தலுற்றேன். அதனால் எல்லையில் கடல் ஏழ்போல் காணப்படும் பிறவியேழும் நீங்கக் கண்டேன்.

(அ. சி.) ஆறுதெரு - ஆறு ஆதாரங்கள். அகப்பட்ட சந்தி - மூலாதாரம். சாறுபடுவன - இனிமை உண்டாவதான. நான்குபனை-நான்கு இதழ்களையுடைய பனைபோன்ற மலர். ஏணி - சுழுமுனை. கடலேழ் - எழுவகைப் பிறப்பு.

(3)

2829. வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

(ப. இ.) அருளால் வழுதலங் கத்தரிக்காயை விதைத்தேன். அஃதாவது அகத்தவமாகிய யோகப்பயிற்சியினை மேற்கொண்டேன். அவ் வித்தின்கண் விளைவாகப் பற்றறுதி என்று சொல்லப்படும் வைராக்கியம் வளர்ந்தது. இப் பற்றறுதியினைப் பாகல் என்று ஓதினர். தத்துவங்களாகிய மெய்யினை ஆராயத் தொடங்கினேன். ஈண்டுப் புழுதியைத் தோண்டினேன் என்பது தத்துவ ஆராய்ச்சி செய்தேன் என்பதாம். இவ் வாராய்வின் பயனாகப் பூசணியாகிய சிவம் பூத்தது. தோட்டக் குடிகளாகிய ஐவரும் தொண்ணூற்றறுவரும் அதனைக் கண்டு தொழுதுகொண்டோடினர். திருவடிப் பேறாகிய வாழைக்கனி முழுதும் பழுத்து விழுப்பயனாயது. வாழ்வைத் தருங்கனி வாழைக்கனி. நெடு வாழ்வைத்தரும் ஈடும் எடுப்புமில் பீடு சேர் திருவடிப்பேற்றினுக்கு வாழைக்கனியே ஒருபுடை யொப்பாம் என்க. வாழை மா பலா மூன்றும் முறையே அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுங் குறிக்கும் குறிப்பாகும்.

(அ. சி.) வழுதலை வித்து-யோகப்பயிற்சி. பாகல்-வைராக்கியம். புழுதியைத் தோண்டினேன் - தத்துவ ஆராய்ச்சி செய்தேன். பூசணி பூத்தது - சிவம் வெளிப்பட்டது. தோட்டக் குடிகள் - இந்திரியாதி விடயங்கள். பழுத்தது - கிடைத்தது. வாழைக்கனி - ஆன்மலாபம்.

(4)

2830. ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்று மின்றிப் பகஎளி தாகுமே.