236
 

24. பொறையுடைமை

522. பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.1

(ப. இ.) அறுவகைக் குற்றத்துள் ஒன்றாகிய இவறன்மை என்னும் பற்றுள்ளத்தார்பால் பொறாமை என்னும் பல்லி பற்றிக் கிடந்தது. பெரும்பாலும் உண்பதும் உடுப்பதும் காண்பதனாலேயே பொறாமை விளைகின்றது. அதனால் அப் பொறாமை வித்து மூக்கையும் நாக்கையும் பின்னிக் கிடந்ததென்றனர். உடுப்பது மூக்குக்கும் உண்பது நாக்குக்கும் தனித்தனி எடுத்துக் காட்டாகும். இவை நம்மைப் பற்றாமலிருக்க வேண்டுமானால் பெரிய பொறுமையை உயிரினும் சிறப்பாகக் கைக் கொள்ளுதல் வேண்டும். பல்லி - உடும்பு. (உவமை ஆகுபெயராய்ப் பொறாமையைக் குறிக்கின்றது.) மூக்கையும் - மண்ணால் வரும் பெருமையையும், நாக்கையும் - மண்ணும் நீரும் சேர்ந்ததால் வரும் வளத்தையும், தெற்றிக் கிடந்தது - இரண்டையும் இணைத்துக் கிடந்தது (பொறாமை). வற்றா தொழிவது - உறையாது நீங்குவது. மாகமை - பெரிய பொறுமை.

(அ. சி.) பல்லி - பொறாமை. கமை - பொறுமை.

(1)

523. ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

(ப. இ.) மன்னவர் சேனையுடன் சூழ்ந்து கைதொழும்படியாகத் திருவடியுணர்வு முற்றியவர் நம்மிடமாதற் பொருட்டு அவரை வழி படுவோமாக. ஊனை ...மாமே - உலகுடல்களைப் படைத்தருளும் சிவ பெருமானைத் தவத்தால் கைவரப் பெற்ற அம்மெய்யுணர்வினர் துணையால் வணங்கித் திருவருளை எய்துதல் எளிது ஆகும்.

(2)

524. வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்2 டாமே.

(ப. இ.) சிறந்த முறையால் வீட்டிலும் நாட்டிலும் பொறுமையைக் கைக்கொண்டால், அப் பயிற்சி நல்ல செவ்வியை உண்டாக்கும். கொல்லையி...டாமே மேலும் பேரொடுக்கப் பெருவெளியில் கூத்தியற்றும் சிவபெருமான் திருவடியில் கூடி இன்புறுதல் உண்டாகும். மன்று - நாடு. கொல்லை - பேரொடுக்கப் பெருவெளி. இலயம் - ஒடுக்கம்; கூட்டம்.

(அ. சி.) கொல்லை - இடுகாடு.

(3)


1. பொருந்தலாற். சீவக, 1815.

2. நிறையுடைமை. திருக்குறள், 154.