8. தியானம் (நினைதல்) 578. வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன்போக மேவல் உருவாய சத்தி பரத்தியான முன்னுங் குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. (ப. இ.) ஆருயிர் நீங்கா நினைவுடன் ஓங்கும் பண்பு தியானமாகும். இந் நினைவிற்போந்த பூதம் ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு, மாயை ஒன்று, ஆருயிர் ஒன்று ஆகப் பதினாறு மெய்களையும் நினைவது ஆருயிர்த் தியானம். இறுப்பு மெய்யாகிய புந்தி யியல்பாகவே புலன்களைப் பற்று தலைவிட்டுக் கடந்து நிற்றல் வேண்டும். இந் நிலை அன்னை அத்தனாகிய சத்தி பரத்தி யான நினைவாகும். கருதப்படும் சிவகுருவை நினைதல் சிவத்தியானமாகும். இவ் விரண்டும் முறையே உருவத்தியானமும் அருவத்தியானமுமாகும். இவை அகத்தவமாகிய யோகத்தின் கூறாகும். உருவாய சத்திபரத்தியானம் - அம்மையப்பராம் அருளுருவ அன்புவழி பாடு. உன்னும் - நினைக்கும். குருவார் சிவத்தியானம் - நிறையருட் குருவாம் சிவனடி நினைக்கும் அறிவுவழிபாடு. யோகத்தின் அகத்தவத்தின். கூறு - இருவகை. (அ. சி.) ஈரெட்டு - பூதங்கள் 5. புலன்கள் 5. அந்தக்கரணங்கள் 4. மாயை 1. சீவன் 1. ஆக 16. புந்தி புலன் போக - புலன்கள் எல்லாம் புந்தியில் ஒடுங்க. (1) 579. கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.1 (ப. இ.) நோக்கு, நாக்கு, மூக்கு, காது (உடம்பு) என்னும் பூதங்கள் ஐந்தன் கூட்டத்தால் பண்ணாகிய ஓசையை எழுப்பிச் சொல்லாக்கிப் பொருளுணர்த்தும் பழம்பொருள் ஒன்றுண்டு. அப்பொருள் திருவருள். அதனை நினைந்தால் அண்ணாக்கின் உள்ளாக எல்லையின்றி எங்கும் பரந்த பொங்குபேரொளியினைக் காட்டும். அப்பயிற்சியான் நம்மை வருத்திப் பிறப்பு இறப்புக்களினின்றும் நம்மை உய்வித்து அருளியதும் அப் பழம்பொருளே. ஞானக்கூட்டம் அறிகருவி (ஞானேந்திரியம்) கூடுமிடம். புண்ணாக்கி - வருத்தி. (அ. சி.) பண்ணாக்கி - நாதத்தை ஒலிக்கச் செய்து. (2) 580. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
1. கண்ணவன்காண். அப்பர், 6. 22 - 1.
|