(ப. இ.) சிவபெருமான் திருவடியிணையினை அவன் திருவருளாலே பற்றிப் பேரன்புபூண்டு கற்றதனால் ஆய பயன் அதனைத் தொழுலென்றே தொழுது, பொருள்சேர் புகழ் புகன்று இடையறாது எண்ணிக்கொண் டிருப்பார்க்குச் சிவமுனிவர்கள் ஒன்றுகூடி எழுந்து எதிர்வரத் தெளிவினையுடைய சிவவுலகம் எய்தலும் ஆகும். பரன்புகழ் - நந்திநாமம் நமசிவய என்னும் சந்தத்தமிழ். முற்றெழுந்....ரெதிர்வர - சிவமுனிவரனைவரும் எழுந்து எதிர்கொண்டேற்க. முற்று (உம்) - அனைவரும். தெற்றும் - தெளிவினை அளித்தருளும். சிவபதம் - சிவன் திருவடி. (2) ஆதனம் (இருக்கை) 614. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவங் குழலும் இயம்ப இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே. (ப. இ.) அகத்தவத்திற்கு வேண்டும் எட்டுறுப்பினுள் ஒன்றாகிய இருக்கைப்பேறு பெற்றார் வருந்தித் தவஞ்செய்துள்ளாரை யொப்பர். வானவர்கோவையும் ஆளும் அமராபதிச் செல்வருமாவர். அந் நிலையினை யாவரும் எடுத்தியம்பிப் புகழ்வர். மிக்க இனிமைதரும் முழவமாகிய தண்ணுமையும், புல்லாங்குழலும் பொருந்தியிசைப்பச் சிவபெருமான் திருவருள் விருந்தின்பத்தினைப் பொருந்தி அருந்திக் கழிமகிழ்வெய்துவர். அருளால் முயன்று இருக்கைத் தவம்செய்தபேற்றால் வானவர் கோவையும் ஆளும் ஆசான் மெய்வேந்தன் இவனென்று புகழ வாழ்வர். தண்முழவம் - தண்ணுமை; மத்தளம். குழல் - புல்லாங்குழல். ஆசான்மெய் - சுத்தவித்தை. (அ. சி.) விருந்தின்பம் - புதிய இன்பம். (3) பிராணாயாமம் (வளி நிலை) 615. செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக் கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலு மாமே. (ப. இ.) அகத்தவப்பயிற்சியின் உறுப்பாம் உயிர்ப்பு (வளிநிலை) முறை கைவந்தவர் செம்பொற் சிவகதி சென்றெய்துவர். எய்துங் காலத்துக் கும்புகும்பாகக்கூடிய அமரர்கூட்டம் வந்து எதிர்கொள்ளும். அவர்கள் எம் பொற்றலைவன் இவன் என்று புகழ்ந்தேத்திப் புகல்வர். சிவபெருமானுடன் இன்பக் கலப்பில் இருக்கலுமாம். செம்பொற் சிவகதி 'சிவனெனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்' உலகம் எம் பொற்றலைவன் - எம் செல்வம்போலும் சிறந்த தலைவன்.
|