பாரொத்த - நிலத்துக்குப் பொருந்திய. சேய் - செவ்வாய். உத்தரம் - வடக்கு. குடக்கு - மேற்கு. (1) 778. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. (ப. இ.) வியாழக்கிழமை தென்புலமாகும். எலும்புமாலை சூட்டப் பெற்ற முத்தலைவேல் இடப்பக்கத்தும் பின்பக்கத்தும் உறுதுணையாய் நிற்பின் முயலும் செயல் அனைத்தும் இன்பமாய் இயலும். வலப்பக்கத்தும் முன்பக்கத்தும் தோன்றுமானால் செயல் துன்பமாய் முடியும். எடுத்துக்காட்டாக: வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களும் கிழக்குநோக்கிச் செல்லலாம். திங்களும் சனியும், வியாழனும் மேற்கு நோக்கியும், வியாழனும், வெள்ளியும் ஞாயிறும் வடக்குநோக்கியும், செவ்வாயும் புதனும், திங்களும் சனியும் தெற்குநோக்கியும் போதல் நன்மையாம். (2)
18. கேசரி யோகம் 779. கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே. (ப. இ.) இன்பமிழ்தமாகிய விந்துவை உச்சித்தொளைக் குகைக்கண் நிரப்பிவைத்தல்வேண்டும். ஒரோ வழி அது கீழ்நோக்காமல் ஒழுகிவிடாமல் மேல் வாயாகிய அண்ணத்தின்கண் தடுத்து, அடுப்பாகிய (இடகலை பிங்கலை சுழுமுனை) மூன்று. நாடிகள் கூடுமிடத்து உண்ணாக்கால் அணைகோலி, விட்டமாகிய புருவ நடுவின்கண் நிறுத்தி, கருமூலப்பையாகிய விதையுட் புகாமல் அடைத்து நடு நாடியில் உறைத்து நிற்பதனால் நமன் நணுகான் என்க. அட்டம் - அண்ணம். பை - விதை. நட்டம் - நடு. மூன்று நாடி கூடுமிடத்தைத் தீமண்டிலமென்பாருமுளர். (அ. சி.) கட்ட - விந்துவைக் கட்ட. கழ...விழாமல் - வெளிப்படாமல். அட்ட...கோலி - வீணாத்தண்டின் கடைவாயிலைத் திறந்து. விட்டம் - வீணாத்தண்டு. மேற்பை - சகசிர அறை. நட்டம் இருக்க - நாடி இருக்க. (1) 780. வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
|