(அ. சி.) இவ்விரு மந்திரப் பாட்டுக்களிலும் ஆறங்க மந்திரங்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இருதயம், நம என்று இருதயாயநம. பேசுந் தலைநம - சிரசேநம. சிகையே - சிகாயநம. கவசம்கொண்டு - கவசாய நம. நேத்திரம் - நேத்திராய நம. பகைநின்ற அங்கம் - அத்திராய நம. (19) 1070 .வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப் பொருத்தி அணிவிரற் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே. (ப. இ.) சூலம் யோனி என்னும் முத்திரைகள் இரண்டும் கைவிரல்களைச் சிறிது வருத்தத்துடன் அமைத்தல்வேண்டும். சிறுவிரல்களை ஒன்றின்மேலொன்றாக மாறிவைத்து, அணிவிரலை நீட்டிப்பிடித்து அமைப்பது சூலமுத்திரையாகும். இவற்றுடன் நடுவிரலிரண்டும் உட்புகுமாறு அமைப்பது யோனி முத்திரையாகும். (அ. சி.) சூலம், யோனி - இரண்டும் முத்திரைகள். (20) 1071 .பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே. (ப. இ.) சிறப்பித்துக் கூறப்படும் சிகார மந்திரத்தில் இகரத்தைப் பிரித்தால் சகரமாகும். இம் மெய்யெழுத்து மேற்சேரும் எழுத்தின்மையால் கூசமிலாத சகரம் என்றாயிற்று. அச்சகரத்தின் மேல் இகரத்தையும் கூசிய விந்துவாகிய மகரத்தையும் கூட்டினால் (ச் + இ + ம்) சிம் என்று ஆகும். இஃது உயிர்ப்புப் பழக்கத்திற்குரிய மந்திரமாகும். (அ. சி.) பேசிய மந்திரம் - சி இகாரம் பிரித்து - ச் + இ கூசிய விந்து - ம். சகாரத்தை முன்கொண்டு கூவினால் சிம் என ஆகும். இது பிராணாயாமம் சித்திக்கும் முறை. (21) 1072 .கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. (ப. இ.) ஓதப்பெறும் மந்திரக்கிழவன் உயிர்ப்புப் பயிற்சிக்குக் கொள்ளும் சிம் என்பவற்றுள் பரந்து செல்லும் ஓசையுடைய சகரத்துடன் மகரமும் சேரச் சம் என்றாகும். இதனைச் சங்கு முத்திரை என்ப. இம் முத்திரை அருளம்மையாரின் இருப்பிடமாகும். இதன்கண் அம்மை எழுந்தருளி விளங்குவள். (அ. சி.) கூவிய - சொன்ன; உருப்போட்ட. சவ்வுடன் பண்ணும் மகரம் - சம். (22)
|