8. வானச் சிறப்பு 105. அமுதூறு1 மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றுங் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. (ப. இ.) பெருமழைநீர் ஊறும் அமுதமாகும். அதனால் நிலவுலகில் உயிர் வாழ்க்கைக்கு வேண்டும் நிலையான உணவு முதலிய பல்வகைப் பயன் தரும் மரங்கள் உண்டாகும். அவைகளும் அமுதூறுவனவேயாம். அவற்றுட் சில வருமாறு: பாக்குமரம், தென்னை, கரும்பு, வாழை முதலியன. இவைகள் அமுதூறுவனவேயாம். அத்தகைய மழையில்லையானால் உலகம் பெருந்துன்பம் எய்தும். அத் துன்பம் எல்லாரானும் வெறுக்கப்படுதலினானும் சாவினைத் தருதலினானும் அதனைக் காஞ்சிரங்காய் என்று ஓதினர். (1) 106. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறு நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க் கரையில்லை எந்தை கழுமணி யாறே.2 (ப. இ.) எந்தையாகிய சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுக்குரிய திருத்த நீரைத் தரும் யாறு கழுமணியாறு என்று சொல்லப்படும். கழுமணி என்பது இயல்பாகவே குற்றமில்லாத நீலமணி. இம் மணிபோன்று தெளிந்த நீரென்பது பொருள். இஃது இறவாத இன்பமாகிய திருமஞ்சனம். ஏனைய யாறுகள் ஓடிவரப் பெருமலைவேண்டும். அதுபோல் இந்த யாறு ஓடிவரும் பெருமலை வரை எனப்படும். அது, நன்னெறி நான்மையுள் சிறந்த காதன்மை வரையாகும். காதன்மை நெறி அறிவு நெறியாகும். அறிவுநெறி எனினும் உண்மைநெறி எனினும், சன்மார்க்க மெனினும், ஞானநெறி யெனினும் ஒன்றே. அஃது இவ்வெல்லையினின்றும் ஓடி வருவது. அது தூய அருவியாகும். இவ்வருவியின் பெருமை சொல்லுக்கு அடங்காதது. ஆருயிரின் அகத்துள் நின்று ஊறுவது. புறத்து யாறுபோல் இதற்கு நுரையில்லை; எவ்வகை மாசுமில்லை. ஏனைத் தெளிந்த நீர்களுக்கு அமைவதுபோன்று தோன்று மிடம், புகுமிடம், இரண்டு பக்கங்களிலுமுள்ள இருகரை முதலிய எல்லை எதுவும் இல்லை. மேலும் சிவபெருமானின் திருவடியின்பத்தினைக் கழுமணியாறாகக் கூறுதலுமொன்று. அதற்கேற்பக் கூறுங்கால், அருளாகிய வரையிடைத் தோன்றி வாலறிவாகிய அருவியாகிச் சொல்லொண்ணாததாய் ஆருயிர் அகத்தே பெருகி இறவாத இன்ப ஊற்றெடுப்பதாகும். அதற்கு வேண்டுதல் வேண்டாமையாகிய நுரையில்லை. இருவினைக்கும் வித்தாம் இருளாகிய மாசில்லை. பேரின்ப வெள்ளமாகிய நுண்ணிய தெண்ணீர்க்கு எல்லை இல்லை என்பதாம். (அ. சி.) உரையில்லை - குற்றங் கூறப்படுவது இல்லை. (2)
1. வானின். திருக்குறள். 11. 2. செய்யவாய்ப். 8. திருத்தசாங்கம், 4.
|