1244. வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும் வந்திடு நாளது முந்நூற் றறுபதும் வந்திடு ஆண்டு வகுத்துரை யவ்வியே. (ப. இ.) வான் வழியாகக் கணக்கிடும் நாழிகை முப்பதும், பன்னிரு மனைகள் எனப்படும் இராசியும், இவற்றான் வரும் நாள்கள் முந்நூற்றறுபதும் அவ்விதியின்படி கணக்கிடப்படும் என்க. அவ்விதியே என்பது அவ்வியே எனத் திகரம் குறைந்துநின்றது. (அ. சி.) ஆகாசம் ஆறு - ஆகாய வழி. அவ்வியே - அவ்விதியே. (14) 1245. அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும் 1எவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாஞ் சவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம் இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம். (ப. இ.) அவ்வினமாகிய மூன்றும்-ஆடாகிய மேட வீதியும், எவ்வின மூன்றும் - விளக்கமிக்க ஏராகிய இடபவீதியும், செவ்வின மூன்றும் - தழைத்து விளங்கும் தண்டாகிய மிதுன வீதியும் எனப் பன்னிருமனைகளும் பகுக்கப்படும் . அவை வருமாறு : "மேடவீதி யிடபவீதி, மிதுன வீதி யெனவொரு மூன்றே, அவைதாம், இருசுடர் முதலிய இயங்கும் நெறியே . இடபம் சிங்கம் மிதுனம் கடகம், இனைய நான்கும் மேடவீதி . மீன மேடம் கன்னி துலாமு, மான இடப வீதிக் கமைந்தன. வில்லு மகரங் குடமே விருச்சிகம், சொல்லிய மிதுன வீதித் துறையே." பிங்கலந்தை, 274.7. ஆடு-மேடம். ஏர் - இடபம். தண்டு - மிதுனம். (அ. சி.) ஆடு - மேடம். (15) 1246. இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம் இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே. (ப. இ.) மூலாதார முதல் சக்கரங்கள் எங்கும் நிறைந்தபின், இதனை இராசிச் சக்கரம் என்று கூறுவர். இச் சக்கரம் விந்து என்னும் ஒளியால் நிலைபெறும். இவ் விந்துவும் நாதமும் அகவோசை புறவோசைகளால் ஒத்த இடத்து இராசியுட் சக்கரம் செவ்வே இயங்கும். (அ. சி.) இராசியுள் சக்கரம் - ஆறாதாரங்களும் மேடம் முதலிய 12 இராசிகளுள். (16) 1247. நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில் நின்றிடு மப்புறந் தாரகை யானதே.
(பாடம்) 1. கெவ்வின.
|