(ப. இ.) ஐகாரத்தை முதலாகக் கொண்டு வளர்ந்தெழும் நவாக்கரி சக்கரம். அந்த ஐகார முதலாகவும் இரீம் ஈறாகவும் வரைவர். அகர முதலாக விளங்கும் சிவபெருமானுக்கு உடையாளாக விளங்கும் முழு முதல்வியை மையாகிய மாயைக்கு முதல்வியாக வழுத்துவாயாக. (அ. சி.) ஐம்முதலாக - ஐ எழுத்து முதலாக. அம்முதலாகியவர் - அகரமுதலாகியவர் சிவன்; "ஆருமறியார் அகாரம் அவனென்று" என்பது காண்க. மைம்முதலாக - மாயைக்குத் தலைவியாக. (16) 1310. வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே. (ப. இ.) நாவுக்கரசியாகிய இவளைப் போற்றும் மெய்யன்பர்களது நாவினிடத்து அவள் விளங்கியருளி மெய்ப்பொருளையுணர்த்தும் செந்தமிழ் மறையாகமங்களை எல்லாம் தொகையாக ஒப்பில்லாத ஒரு நாவிடத்துச் சொல்லியருள வல்லாளாவள். அவ்வன்பர்களது திருமுகமும். அருள் பொலிவோடு முற்பட்டுத் தோன்றும். கண்டு கொள்வீர்களாக. (அ. சி.) நாவுக்கரசு இவள் தன்னை - வாக்குக்கு அரசியை; வாகீசுவரியை. ஒரு நாவிடை - தன்னைத் துதிக்கும் ஒப்பற்ற ஒருவனுடைய நாவினாலே. முகத்துளும் - முகப்பொலிவினால். (17) 1311. கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடிற் கொண்டஇம் மந்திரங் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையு மானுடர் கையதாய் வென்றிடும் வையக மெல்லியல் மேவியே. (ப. இ.) திருவருளால் கண்ட இச் சக்கரம் இடையறாது நாவிலழுத்திடிற் கைக்கொண்ட இம் மந்திரமே கூத்தப்பெருமான் திருவுருவாகும். இதுவே திருவம்பலச் சக்கரமுமாகும். இதனைப் போற்றுவார்க்குத் திருவருளம்மை விளங்கித் தோன்றுவள். அதனால் அச் சக்கரமும் அவர்கட்குக் கைகூடும். அவர்கள் உலகியல் நிகழ்ச்சிகளையும் வெல்லுவர். (அ. சி.) கூத்தன் - நடராசன். மன்றினுள் வித்தை - திருவம்பலச் சக்கரம். (18) 1312. மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச் சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லியல் பாலே நடந்திடுந் தானே. (ப. இ.) பேரிரக்கத்தான் மென்மைத் தன்மை வாய்ந்த மெய்ப் பொருள் முதல்வியைக் குருமொழிகொண்டு போற்றித் தொடர்ந்திருங்கள். அவள் திருவருளாலே உலகில் நன்மை தீமைகள் பலவாக எல்லையின்றி மாறிமாறிப் பெருகிவரும் இயல்புகள் ஒழிந்து அளவில்லாத காலங்கள் இன்பமே தரும் நன்முறைமையோடு நடக்கும்.
|