513
 

(அ. சி.) சொல்லியல் - உபதேசம். பல்லியல்பாக - பல வகையாக. நல்லியல்பாலே - நன்மையாகவே.

(19)

1313. நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாந்
தொடர்ந்திடுஞ் சொல்லொடு சொற்பொருள் தானும்
கடந்திடுங் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரிற் பகையில்லை தானே.1

(ப. இ.) திருவருள் வலத்தால் குருமொழியை இடையறாது கணிக்க எல்லா நன்மைகளும் எளிதாக நடக்கும். சொல்லும் பொருளும் தொடர ஒண்ணாத சொல்லுலகுக்கு முதல்வியாகிய திருவருளம்மையை இடையறாது தொழுவார்க்கு நிலவுலகில் பசி, வறுமை, நோய், பகை முதலிய எவ்வகை இடையூறும் உண்டாகா. கணிக்க - உள்நாக்கால் ஒலிக்க சொல்லுலகு - சத்தப்பிரபஞ்சம்.

(20)

1314. பகையில்லை கௌமுத லையது வீறா
நகையில்லை சக்கர நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.2

(ப. இ.) மேற்கூறியவாற்றால் பகையில்லாமையுடன் கௌ முதலாக ஐ ஈறாக ஒலித்துவரின் அவர்களைப் புறக்கணிப்பார் எவரும் இலர். மேற்குறித்த சக்கரத்தை இடையறாது வழுத்துவார்க்கு நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர வேறுபாடுள்ள பிறப்பினுள் எவ்வகைப் பிறப்புத் துன்பமும் இல்லையாகும். அதனால் திருவருளம்மையை வணங்குங்கள்.

(அ. சி.) பகை...ஈறா - கௌ முதல் ஐ ஈறா உச்சரிப்பின் பகையில்லை. நகையில்லை - பிறர் பழிப்பு இல்லை. பல்லுரு - பல வகையான உயிர் வருக்கங்களுக்கு எல்லாம். மிகையில்லை - பிறப்பு இல்லை. வகை இல்லையாக - வெல்லுந் திறமை இல்லையாக.

(21)

1315. வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலங்கிடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.3

(ப. இ.) முப்பத்தாறு மெய்க்கும் முதல்வியாகிய அம்மையைத் திருவடியுணர்வு கைவந்த நல்லுயிர்களெல்லாம் வணங்கி அவள் திருவருளில் அடங்கி நிற்க, காமம் வெகுளி மயக்கங்கள் கலங்கி அகன்றொழியும். செந்நெறிக்கு வாயிலாகிய சீலம் நோன்புகள் துலங்கிக் கைகூடி விளங்கும். நலங்கிடும் - அடங்கிடும். சூழ்வினை - நற்றவம்.

(அ. சி.) நலங்கிடும் - அடங்கும்.

(22)


1. பாடுவார். ஆரூர், 7. 29 - 3.

2. உரைசேரும். சம்பந்தர். 1. 132 - 4.

" உலகமே. சிவஞானசித்தியார், 5. 2 - 6.

3. காமம். திருக்குறள், 360.