594
 

(அ. சி.) சென்னெறி - செல்லத்தக்க நெறி. பின் முன்நெறி - நந்தி வகுத்த சன்மார்க்கத்துக்கு முந்தியும் பிந்தியும் மானிடரால் வகுக்கப்பட்ட நெறிகள்.

(20)

1522. உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

(ப. இ.) சிவன் திருவடியைப் பொருந்துதற்கு வாயிலாகிய நன்னெறியினை அறிவதும், உயிர்க்குயிராகிய தழல் வண்ணனாகிய சிவபெருமானை அறிவதும் ஆகிய அறிவினையறிவதும், அச் சிவனைப்பெறுமாறு அறிவதும் ஏற்பட்டால், எந்நெறியினரோடும் பிணக்கு ஒன்றும் ஏற்படமாட்டாது. பிறப்பறும்படி பேரொளிப் பிழம்பாம் சிவபெருமான் திருவடியிற் பிரிவிலா அடிமையாய் உறைதல் வேண்டும். இவ் வுண்மைகளை அறிவிற்குறைந்தார் அறியமாட்டார்.

(அ. சி.) உறும் ஆறு - அடையத்தக்க மார்க்கம். பிணக்கு - விரோதம். அறுமாறு - பிறவி அறும் வழி. அங்கியுள் - அங்கி உருவனான சிவபிரானிடத்தில். இறுமாறு - இலயிக்கின்ற விதம்.

(21)

1523. வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

(ப. இ.) சிவபெருமான் திருவடியிணைகளை அடைவதற்கு நேர் வழியாகத் திகழ்வது நன்னெறியே. அதன் வழியே செல்வது பயிற்சித் துணையாகும். உலகியல்பினைக் கடந்து செல்லும் புறச்சமயத்தார் கற்பனையாகக் கூறும் பொய்ம்மொழிகளைக் கேட்பார் நன்னெறிச் செல்லார். பிறப்பு இறப்புக்களாகிய சுழியிற்பட்டு நடக்கும் பெருந்துன்பத்தினை நீக்கியும் நிலையாப் பொருளைப் பற்றுச்செய்தலாகிய பழியினை நீக்கியும் நடப்பார்க்குச் சிவபெருமானைத் தொழுதலுமாகும்.

(அ. சி.) வழி - சன்மார்க்க வழி. பரிசு - சாதனம். கழி நடக்கு - வரம்பு கடந்த நடக்கை. கற்பனை - மானிடரால் கற்பிக்கப்பட்ட மதங்கள். சுழி நடக்கும் துயரம் - கற்பனை செய்யப்பட்ட மதங்களின் கொள்கைகளால் ஏற்படும் துயரம். பழி நடப்பார் - துன்பம் தருவனவற்றைப் பழித்து நடப்பார்.

(22)

1524. வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வவ்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.1


1. என்னபுண்ணியம் : சம்பந்தர், 2. 106 - 1.