729
 

(ப. இ.) சிவபெருமான் படைப்போனாகிய அயன் மண்டையோட்டினை ஆருயிர்கட்குக் காட்டிப் பிச்சை ஏற்பானாயினன். சிவன் தன்னைவிட்டு நீங்காச் சிவையின்வழி முப்பத்திரண்டு அறமும் இடைவிடாது செய்வித்துக் கொண்டிருக்கின்றான். அங்ஙனமிருப்பவும் இரப்பதற்குக் காரணம், ஈவோரெல்லாம் அருளாளர் நிலையாகவும் இரப்போரெல்லாம் ஆண்டான் நிலையாகவும் கருதுதல் வேண்டும் என்னும் குறிப்பு. அதனால் 'இரப்பவர்க்கீயவைத்தான் ஈபவர்களுக்கு அருளும் வைத்தான்' என்னும் செந்தமிழ்ச் சிறப்பு மறையின்வழி ஒழுகுதல் வேண்டும் என்பது காண்க. பிரமன் சிரங்காட்டி இரப்பது பிரமனிலும் தான் உயர்ந்தோன் எனவும், உலப்பிலோன் எனவும் மொழிந்திருக்கும் இயற்கை உண்மையினை எண்மையாக உலகத்துக்கு உணர்த்தவென்க. பிரமன் பரமாக: பிரமனிலும் தான் பரம் என்பதை உணர்த்த.

(2)

1851. பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் 1தானே.

(ப. இ.) எழுவகை யுலகம் முழுமையும் வழுவின்றிப் படைத்த விழுப்பொருளாம் சிவபெருமானை இரந்துண்பவன் என்று கூறுவர் உண்மையறியார். அவன் எதன்பொருட்டு இரக்கின்றான் என்பதனை உய்த்துணர்தல் வேண்டும். அஃது இடைவிடாது தன் மெய்யடியார்கள் தன்னையே நினைந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உண்ணும் ஊண் தன் திருவருளால் வழங்கப்படுவதென்னும் மெய்ம்மை உணர்த்த உணர்கின்றனர். அதனால் அவர்கள் அத் திருவருளின்பால் இரந்து பெற்று உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணில் தன் திருவடியினை எய்துவது எளிதாம் என்னும் திருக்குறிப்பாம் என்க. உண்ணும் ஊணே சிவன் தந்ததெனக் கொள்வோர், அதனால் நிகழும் எல்லாமும் சிவன் தந்தன வென்றே கொள்வர். அதனால் இறைபணியில் நிற்பர்.

(3)

1852. வரவிருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரவிருந் தான்தன்னை நல்லவர்க் கின்பம்
பொரவிருந் தான்புக லேபுக லாக
வரவிருந் தாலறி யானென்ப தாமே.

(ப. இ.) மெய்யடியார்கள் செந்நெறிக்கண் வருமாறு சிவபெருமான் அருளுருக்கொண்டு அந்நெறிக்கண் வெளிப்பட்டு நின்றனன். திருவடியுணர்வால் நன்னெறிக்கண் செல்வார்க்குத் தன்னை உரிமையாகக் கொடுத்திட இருந்தனன் சிவன். அம்முறையால் நல்லவராகிய சிவஞானியின்பால் திருவடியின்பம் உண்டாதற்பொருட்டு வெளிப்பட்டுமிருந்தனன். தன் திருவடியே நிலைத்த பெரும்புகலாகக்கொண்டு ஒழுகும் உறுதி உண்மையர் தம்மை உடனிருந்து உணர்வின்கண் அறிவான் என்பதல்லால், அறியான் என்பது எங்ஙனம் பொருந்தும்? பொர - உண்டாதற்பொருட்டு.

(4)


1. அண்டர். அப்பர், 5. 39 - 3.

" கொள்ளேன். 8. திருச்சதகம், 2.