735
 

18. பூரண குகைநெறிச் சமாதி

1865. வளர்பிறை யிற்றேவர் தம்பாலின் மன்னி
உளரொளி பானுவின் உள்ளே யொடுங்கித்
தளர்விற் பிதிர்பதந் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி யுடல்விட்டாற் றானே.

(ப. இ.) யோகி வளர்பிறையில் உடலைவிட்டு நீங்கினால் திங்கள் மண்டிலத்தே சென்று தங்குவன். செல்லும் வழியில் துறக்கவுலகத்தும், ஞாயிற்றுலகத்தும், பிதிர் உலகத்தும் தங்கித்தங்கிச் செல்வன்.

(அ. சி.) ஊர் ஒளி-சீவ ஒளி. பிதிர்பதம்-உடலைவிட்டு உயிர் பிதிர்ந்து நிற்கும் பதம்.

(1)

1866. தானிவை யொக்குஞ் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின்சார் வாகியே.1

(ப. இ.) மேலோதியவாறு சமாதி கைகூடாது உடல்விட்டுப் போன யோகி நிலையான சிவனடிப் புகலிடம் புகாது மீண்டும் பிறக்க நேரின், நற்சார்பில் வந்து பிறந்து வினைநீங்கி அருளின் சார்வாகி நிலையான புகலிடம் மாயோகி ஆவன்.

(அ. சி.) புகலிடம் போந்து-கன்மத்துக்கு ஈடாகப் பதவி அடைந்து. பின்னால் நவைதீர - உலகிற் பிறந்தபின் கன்மம் நீங்க. நிரந்தரம் - இடைவிடாது. அருளின் சார்வாகி - அருள் கூட்டுவிக்க நேர்ந்து.

(2)

1867. தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத் தாமாறா மவ்விந்து
தானதி லந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.2

(ப. இ.) அங்ஙனம் புவியிற் பிறந்த யோகி ஏனை உலகோர்போன்று உண்டுடுத்து உழைத்து உறங்கி வாழ்ந்து சிவயோகி செல்லும் தூமாயையின்கண் முன்போற் சிவயோகி ஆவதன்முன் இவ்வுடலின்கண் சித்தி கைவரப்பெற்றுத் திகழ்வன். அதற்கு நிலைக்களமாகிய இவ்வுடலே தூயவுடலாகும்.

(அ. சி.) புவியோர் நெறி - கன்ம மார்க்கம். விந்துதானதில் - சுத்த மாயையில். ஊனத்தோர் சித்தி வந்து - அந்த உடலிலேயே ஒப்பற்ற சித்திபெற்று. ஓர் காயம் - ஒப்பற்ற உடலாக மாறும்.

(3)


1. தவஞ்செய்தார். சிவஞானபோதம், 8. 1 - 1.

2. தானெனை. ஆரூரர், 7. 100 - 1.