(அ. சி.) பத்தி விற்றுண்டு - பத்தி நெறியில் தாம் நில்லாமல் காசுக்காகப் பிறர்க்கு எடுத்துரைத்து. பகலைக் கழிவிடும் - நாள் கழிக்கும். மத்தகர் - மதி மயக்கம் உடையவர். வித்து - பிறப்புக்கு ஆதாரமான கன்மம், விளைபுலம் - கர்ப்பாசயம். பித்தர் - ஞானிகள். (3) 2032. வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை நடக்க வுறுவரே ஞான1 மிலாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. (ப. இ.) 'அயல் வழக்கின் துறை வெல்லும் அசைவில் செழுந்தமிழ் வழக்கே' வழங்கும் தென்றமிழ் நாட்டினரும் அயலவர் மயக்கால் வடக்கு வடக்கு என்று மதிமயங்கி நடக்கலுறுவாராயினர். 'மாதவஞ் செய் தென்திசை' என்னும் வாய்மையினை அறவே மறப்பாராயினர். இன்றுபோல் அன்றும் மறுப்பாருமாயினர். அந்தோ! எந்தநாள் விடியுமோ இந்த மயக்கம்! அவ்வடக்கே தென்னாட்டிலில்லாத சிறப்பு ஏதும் வைக்கப்பட்டதும் இல்லை. தென்னாட்டிலுள்ள சிறப்புகள் பலவும் அங்கு இன்றும் கிடையா. இத்தகையோரே சிவஞானமில்லாதவராவர். அவ் வடக்கின்கண் அடங்கிய உலகமெல்லாம் அகத்தின்கண் அடங்கும் ஈண்டு உலகமென்பது நிலையில் பொருள்களாகும். இஃது அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்னும் முறைமைபற்றி யாகும். அம் முறைமை திருவடியுணர்வுடையார்க்கே தெரியும். ஆயின் தெற்கின்கண்ணுள்ள சிவனடிப்பெருமை நிலையுடையதாய் அண்டபிண்டத்துள் அடங்காததாய் அறிவின்வழியாய் உணர்வின்கண் புணர்வதாகும். காணக் கேட்கக் கருதக் கிளக்கக் கிட்டாதாகும் அத் திருவடிப் பெருமை. கம்பன் அடியார்க்கு நாள்கோள் முதலியவற்றால் எந்நாளும் நலிவுண்டாகாது என்பதை உலகோர்க்கு உணர்த்த வுன்னினன் சிவன். நாவரையர் வாயிலாகத் தூண்டியருளினன். ஞானசம்பந்தப் பெருமானார் "கோளறு பதிகம்" வாளெனப் பாடியருளினர். அந்நாள்தொட்டு இந்நாள்காறும் அவ் வழி யொழுகுவார் எத்துணையர்? அப் பதிகத்தை அறிந்தார்தாம் எத்துணையர்? அறிவித்தார் எத்துணையர்? இப்பொழுதுள்ள நடைமுறைச் சைவம் முக்கூற்றுப் புறச்சமய்த்துள் எக்கூற்றுளடங்குமென்பதை யாவர்தாம் கூறவல்லார்? அதுபோல் திசைமயக் கொழிக்கச் சிவபெருமானால் நேரே தூண்டப்பட்டுக் கயிலைக் காட்சியினைத் திருவையாற்றில் கண்டு திருநாவுக்கரையர் பாடியருளினர் திருமுறைத் திருப்பதிகம். அதனைக் கைக்கொண்டு திருவையாற்றைக் கயிலை எனக் காண்பார் எத்துணையர்? இடமயக்கொழிக்கக் காரைக்காலம்மையார் கைலையினின்றும் போந்து திருவாலங்காட்டில் செந்தமிழ்த் திருப்பதிகம் பாடித் திருவடியுற்றனர். அதனை மேற்கொண்டு இடத்தாலும் மாதவம்செய் தென்நாடே சிறந்தது என்று போற்றிப் புகழ்வார் எத்துணையர்! இனியேனும் நன்னெறிபற்றி உறுதியுடன் ஒழுகிச் சிவ இன்பம் பெற்றுச் சிறப்போமாக. திருவருளும் பெருகத் துணைசெயுமாக.
1. எந்நிலத்து. நாலடியார், 243. " தேனமர். சம்பந்தர், 2. 85 - 11. " வளர்மதிக். அப்பர், 4. 3 - 11. " சூடுமதி. 11. காரைக். மூத்ததிரு. 11.
|