அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி - அறிவின் அடையாளம். (அ. சி.) முன்னே - முதற் படைப்பில். இடியும் முழக்கமும் - விந்துவும் நாதமும். (19) 20. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே ஏழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலு மாமே. (ப. இ.) நிலைபெற்ற வாய்மை மொழியாகிய திருவைந்தெழுத்தை இடையறாது கணிக்கும் எண்ணரிய சிறப்பாலும், சிவபெருமானின் பொருள்சேர் புகழை எப்பொழுதும் சொல்லும் எழிலாலும் மெய்யன்பராவர். அத்தகையோர் தூயவுள்ளத்து அவன் எழுந்தருள்கின்றனன். அத்தகைய முழுமுதல் விழுப்பொருளை அவன் திருவாணை பெற்று உலகத்தைப் படைக்கின்ற பிரமனாகிய அவனும் நினைப்பன் ஆயினும் அவனாலும் உணரவொண்ணா தென்க. மதித்தல் - தியானித்தல்; உள்ளந்தழுவல். உணரலுமாம் + ஏ - உணரலுமாமே. ஏகாரம் ஏதிர்மறை வினாப்பொருள். ஆதலால் உணர வொண்ணாதென்பதாம். (அ. சி.) மதித்தவர் - மதிக்கலையைப் பதியச் செய்தலாகிய யோகானுட்டிப்பால் தியானித்தவர். முன்னும் (பாடம்) பிரமாவிற்கு முந்தியவனாகிய விண்டுவும். (20) 21. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் கானக் களிறு கதறப் பிளந்தஎங் கோனைப் புகழுமின் கூடலு மாமே. (ப. இ.) மழைக்கும் மழையருளும் வானப் பெருங்கொண்டல் சிவபெருமான். மால் அயன் வானவர்கோன் வானவர் முதலாயினார்தம் தூவாமாயையினாலாகிய இழிந்த பிறப்பாம் ஊனப் பிறவியை ஒழித்தருளும் ஒப்பில்லாத முழுமுதல். தேவதாரு வனத்துப் போலி முனிவர்கள் ஆணவச் செருக்கால் வேள்வியினைப் புரிந்தனர். விளைவும் ஆணவச் செருக்காகிய காட்டானை அதன்கண் தோன்றிற்று. அவ்வியானையைச் சிவபெருமான் உரித்துப் போர்த்து அடக்கினன். நாட்டானை நலம் பெறுவதும் காட்டானை பொலம் பெறுவதும் காண்க. யானை ஆணவச் சார்பாம் மாயை. இவ்வுண்மை 'தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி' என்பதனால் உணரலாம். எம் தலைவனாகிய அவனை மனமார நினைந்து வாயாரப் புகழுங்கள். அப்பொழுது அவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் நுகர்தலும் உண்டாம். (அ. சி.) வானப் பெருங் கொண்டல் மால் - கார்நிற வண்ணனாகிய திருமால் கானக்களிறு கதறப் பிளந்த எம்கோன் - யானையை உரித்த சிவபெருமான். (21)
|