(ப. இ.) வடமொழியாளர் நீ அதுவானாய் என்னும் தொம் தத்அசி என்னும் உரையே பேருரை என்பர். பேருரை - மாவாக்கியம். மெய்ம்மை நோக்கின் தென்மொழியாளர் கூறும் அது நீ ஆனாய் என்னும் தத்துவம் அசி என்னும் பேருரையே சீர்மையும் முறைமையும் செறிந்து திகழ்வதொன்றாகும். அது - சிவம். நீ - ஆருயிர். அசி - இருக்கின்றாய். 'நும்பின் எம்மை நுழையப் பணியே' என்னும் சீர்மையினாலும், இறைவனை முற்கூற வேண்டும் முறைமையினாலும் தென்னெறியாளர் கூறும் தத்துவமசியே சிறப்புடைத்தென்க. இம் முறைப்படி யொழுகச் சிறந்த பெருநந்தியின் பேரருள் செம்மைச் சிவபெருமானாக ஆருயிர்களை ஆக்குவிக்கும். அந் நிலையில் அவ்வுயிர் அருள் வடிவேயன்றி எல்லையிலாப் பேரின்ப வடிவமாயும் சிறக்கும். பண்டை மறைகள் என்பன தொன்மைத் தண்டமிழ்த் தனிமுதல் மறைகளையே யாம். (அ. சி.) நீ யதுவானாய் - துவம் தத் அசி என்பர் வடமொழியாளர். பேருரை - மகாவாக்கியம் என்பர் வடமொழியாளர். அது நானானேன் என்னச் சமைந்து - "நீ அதுவானாய்" என்ற நிலை. 'அது நான் ஆனேன்" என்று நிற்க. சேய சிவம் - அதுவரை எட்டாமலிருந்த சிவம். அனந்தானந்தி - முடிவிலா ஆனந்தம் எய்துமவன். (8) 2534. உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத் திரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே. (ப. இ.) ஆருயிர் திருவருள் நினைவால் பரமாகிய திருவருள் நிலையினை எய்தும். அதன்மேல் சிவபெருமான் நிலையினை எய்தும். எய்தும் - சாரும். திரிபோன்று அறிவுக்குப் பற்றுக்கோடாக விளங்கும் வேதத்தின் கண்ணும் சிவபெருமான் நிலையே சிறப்பு நிலையாகும். இந்நிலையினை உரையற்று உரைக்கும் நிலையில் ஓமொழிவண்ணம் என்ப. (அ. சி.) வேதத்திரி - அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வேதங்கள். ஓமயம் - பிரணவ வடிவம். (9) 2535. வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்குந் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியாச் சிவகதி யைந்துமே. (ப. இ.) வாய், நாசி, புருவம், மத்தகம், உச்சி என்னும் ஐந்திடமும் சிவ விளக்கம் தோன்றும் நிலை என்ப. புருவ நடுவிற்கும் உச்சிக்கும் இடையேயுள்ள நெற்றி நடுவினை மத்தகம் என்ப. இவ் வைந்தும் ஒரு புடையொப்பாக முறையே படைப்பாதி ஐந்தொழிலுக்கும் பகரலாம் நெற்றி நடுவாகிய மத்தகத்துச் சமனை உன்மனை என்னும் திருவருள் நிலைகள் உளவென்க. இவையிரண்டனையும் நடப்பாற்றல் வனப்பாற்றல்களாகக் கூறுதலும் ஆம். தாய் நாடியாகிய நடு நாடி முதலாக ஒலி முதலாய அனைத்தும் எளிதின் விளங்குவதுமட்டுமல்லாமல் கழிபெருஞ்சேணொளியும் விழிமுன் தோன்றுவது போல் அகத்துத் தோன்றும். அதுவே சிவநிலை என்க.
|