இவ் வுண்மை, '....நெடுநா ளிருந்த பேரும், நிலையாக வேயினும் காயகற்பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்' (பரிபூர. 10) எனத் தாயுமானச் செல்வர் ஓதியவற்றான் உணர்க. பாம்பு என உருவகிக்கப்படும் குண்டலினியும் மெய்யாக அகத்தே எழும் உயிர்ப்புப் பயிற்சியினால், 'மணி கடல் யானை வார்குழல் மேகம், அணிவண்டு, தும்பி வளைபேரிகை யாழ்' (586) என்னும் பத்துவகை இன்னிசை முழக்கமும் அகத்தே முழங்கும் குறவம் - குரல்: செய்யுட்டிரிபு. அம் முழக்கத்தூடே குளிர்வரையாகிய அமிழ்த வூற்றுப் பெருகும் புருவ நடுவின்கண் ஏறுதல் வேண்டும். ஏறி ஆண்டுத் தோன்றுந் திருவடித் தீந்தேனை ஓவாது பருகிக்கொண்டு அவ்வின்பத்தினையே எண்பெரும் மலராகக்கொண்டு நாளும் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளாம் சிவபெருமானை அவ் வுயிர்கள் அஞ்செழுத்தோதி வழிபடும். அத்தகைய நந்தியை அல்லாமல் ஏனைய வுருவங்களை என் மனம் மறந்தும் இறைவன் என முறைபிறழ நிறையழிய எண்ணி ஏத்தாது என்க. (அ. சி.) பறவை - சரீரம். (பறவை - புள், உயிர்; ஈண்டுப் புள்ளிருக்கும் குடம்பையைக் குறித்தது.) கற்பமும் - காயகற்பமும். பாம்பும் - குண்டலியும். குறவம் சிலம்ப - மணி, கடல், யானை போன்ற பத்துவித நாதங்கள் ஒலிக்கக்கேட்டு, குளிர்வரை - அமிழ்தம் ஒழுகுவதால் குளிர்ந்திருக்கும் மேருவாகிய புருவமத்தி. நறவு - தேன் - அமிழ்தம். (7) 2584. உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப் பெறுதுணை செய்து பிறப்பறுத் 1துய்ம்மின் செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து உறுதுணை யாயங்கி யாகிநின் றானே. (ப. இ.) கட்டு ஒட்டு ஆகிய இரண்டின்கண்ணும் மட்டில் பெருந்துணையாய் நின்று அருள் புரிபவன் நந்தி. அவனே தேவர்கள் முதலிய அனைவர்கட்கும் முழுமுதல்வனாவன். அவன் திருவடிப்பேறாகிய ஒட்டு நிலையினை எய்துதற்கு அவன் திருவருளே துணையாகக் கொள்ளுதல் வேண்டும். இது கதிரவனை அவன்றன் கதிரின் துணைகொண்டே காணுதல் வேண்டும் என்பதனையொக்கும் அத் திருவருளைத் துணைக்கொண்டு செம்பொருள் நூல் வழியாக ஒழுகிப் பிறப்பறுத்து உய்யுங்கள். ஆருயிர்க்கு யாண்டும் நெருங்கிய துணை திருவருளே. அத் திருவருளை மேற்கொண்டு சிவனடியைச் சிந்தியுங்கள். அத் திருவடியை நாடி வழிபடுதலான் அவன் சிறந்த பெருந்துணையாக நின்றருள்வன். அவன் தானே இயற்கை அறிவுப் பேரொளியாய் அம்மைச் செறிவுருவாய் விளங்கி நின்றருளினன். கட்டு - பிறப்பு. ஒட்டு - சிறப்பு. (8) 2585. வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றுங் கருவரை யானென்றும் ஊனத னுள்நிநைந் தொன்றுபட் 2டாரன்றே.
1. வாழ்த்துவதும். 8. அறிவுறுத்தல், 16. 2. மூவா. அப்பர், 4. 114 - 3.
|