1164
 

அவற்றை அவ் ஆறு சுமத்தல் அவ் வுயிர் வினைப்பயன்களை நுகர்வ தொக்கும். முழுநீறு சண்ணித்த திருமேனியும், நீண்ட திருச்சடையும் உடைய நந்தியை வழிபட்டு அவன் திருவடியே பெரும் பேறெனக் கொண்டு என்னுள்ளம் இமைப்பொழுதும் வேறெதற்கும் விலகாதென்க.

(அ. சி.) ஆறிட்ட நுண்மணலாறு - ஆற்றில் உள்ள நுண்ணிய மணல்போல் அளவற்ற கன்மபலனை. பேறிட்டு - அடையும் பொருட்டு.

(3)

2806. வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென்
கானின்ற செந்தீக் கலந்துடன் 1வேகிலென்
தானொன்றி மாருதஞ் சண்டம் அடிக்கிலென்
நானொன்றி நாதனை நாடுவன் நானன்றே.

(ப. இ.) உண்மைச் சிவனடியார்கள் எஃது எவ்வாறு நிகழினும் தங்கள் உண்மை அன்புள்ளம் சிவன் திருவடியினின்று மொருகாலும் நிலைபெயரவொட்டார். செருமுகம் நோக்கிச் செல்லும் மறவன் உள்ளம் போன்று மெய்யடியார் உள்ளம் ஒருமுகப்பட்டுத் திருவடியினையே நோக்கிநிற்கும். வானம் விழும்போல் பேரிடிமுழங்கினால்தான் என்ன? பெருங்கடல் பொங்கிப் பெருவெள்ள ஊழி நேர்ந்தாற்றான் என்ன? பெருங்காட்டுத்தீ முறுகி நாடெலாம் வெந்து நண்ணரிய உலகங்களும், பிற அண்டங்களும் வெந்தாற்றான் என்ன? காற்று, பெருங்காற்று, ஊழிக்காற்று முதலியன தோன்றி எல்லாம் அழியநேர்ந்தாற்றான் என்ன? நெஞ்சே! நான் ஒன்றுதலாகிய ஒருமுகப்பட்டு என்னுள்ளே நாதனை நாடுவன்.

(4)

2807. ஆனை துரக்கிலென் அம்பூ டறுக்கிலென்
கானத் துழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நானுழு 2வேனன்றே.

(ப. இ.) ஆனை மதம்பொழிந்து நெறியல்லாநெறிச் சென்று என்னைத் துரத்தினாலென்ன? கண்ணேரனைய கூர்ங்கணை நெஞ்சூடு சென்று அறுத்தாற்றானென்ன? காட்டில் வாழும் வலியும் ஆண்மையும் ஊக்கமும் மிக்க புலிவந்து வளைத்துக் கொண்டாற்றானென்ன? சிவவுலகத்தின்கண் திருவடிப்பேறு எய்துமாறு எம்பெருமான் அமைத்தருளிய மெய்யுணர்வு உழவாம் 'ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல்' முதலிய அறிவினில் அறிவாம் (2615) தொண்டினை அடியேன் ஆற்றுவேன் என்க. உழுவென்பது ஈண்டு ஞானவழிபாட்டின்மேற்று. அது ஞானத்துழவு என்பதனாலும் விளங்கும்.


1. வானந். அப்பர், 4. 113 - 8.

" மலையே. " 5. 91 - 5.

2. மெய்ம்மையாம். அப்பர், 4. 7 - 2.

" பலபல. கொலைவரி, அப்பர், 4. 2 - 5, 7.

" ஞானநூல். சிவஞானசித்தியார், 8. 2 - 13.

" பொற்கொழுக். திருவுந்தியார், 38.