1204
 

வீற்றிருக்கும் தவநிறை திருமரம் குருந்தம் என்பது பொருந்தும் இயற்கையன்றோ! அதனால் சிவகுருவின் திருவடியிணையினைச் சேர்வதைக் 'குருந்தம தேறி' என உருவகித்தனர். அஃது ஆளுடைய அடிகட்குத் 'திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவி' ஆட்கொண்டருளினமையான் உணரலாம். சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய (2877) மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும். 'காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட' எனத் தாயுமானச் செல்வர் (30 - 1) அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே நடுவுரையாகிய திருவைந் தெழுத்தைச் சிவதீக்கை பெற்று ஓவாது ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர்.

(அ. சி.) கூகை . . . . . . ஏறி - அஞ்ஞானமுள்ள சீவன் சிவமாகிய குருவை அடைந்து குணம் . . . . . . காலத்து - உலகுக்கு முக்குணமாயை காரணம் என்று அறிகின்றபோது நாக. . . . . .டும் - குரங்கையொத்த மனமும் அடங்கும். பாக . . . . பண்பறும் ஆமே - மனத்தை அடக்கி நடத்துகின்ற தன்மையுடையவன் அவன்.

(55)

2881. வாழையுஞ் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையுஞ் சூரையும் வன்துண்டஞ் செய்திட்டு
வாழை யிடங்கொண்டு வாழ்கின்ற வாறன்றே.

(ப. இ.) வாழையாகிய இன்பமும், சூரையாகிய துன்பமும் இருவினைக்கீடாக வந்து அகப்புறக்கலனாம் எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நான்கனுள் சிறப்பாக இறுப்பு மெய்யென்னும் புத்தி தத்துவத்தை உறைவிடமாகக் கொண்டன. இன்பத்தினும் துன்பம் மிக்க வலியுடையது என்று கூறுவர். என்னை, இன்பமும் துன்பமும் தாமே வருவன அல்ல. பெரும்பாலும் வேறொரு வாயிலாகவே வருவன. அவ்வாயிலை மூன்றாகப் பகுத்தனர். அவை தன்னைப்பற்றி வருவன, பிறவுயிர்களைப்பற்றி வருவன, இயற்கையாகிய தெய்வத் தூண்டுதலான் வருவன என்பன. ஆயின் ஒருவர் வாயிலாக நமக்கு இன்பம் வரும்போது நாம் மகிழ்ந்து அவர்க்கு இன்புறத் தக்க நன்றி பாராட்டுதலைச் செய்வோம். அல்லது வாளா மறந்திருப்போம். அனால் துன்பம் வருமேல் அத் துன்பம் வருதற்கு வாயிலாக வுள்ளாரைத் துன்பம் பலவுறுத்தி மகிழ்வோம். இயலவில்லையேல் மறவாது நினைந்து நெஞ்சம் புண்ணாவோம். அதனால் பாவமும் பெருகும். இம் முறையான் என்க. தெய்வம் ஈண்டு ஊழ். வாழையும் சூரையும் ஆகிய இன்பத் துன்பங்களைத் திருவருட்டுணையால், இருவினையொப்பால் வன்மையாக வேறுபடுத்துதல் வேண்டும். வேறுபடுத்தலாவது 'நாமல்ல இந்திரியம், நம் வழியின் அல்ல, வழி நாமல்ல' என்று உண்மை கண்டிருத்தல். அங்ஙனமிருந்தால் என்றும் ஒன்றுபோல் வாழும் தலைமைப்பாடமைந்த சிவபெருமான் நம்முடைய வுள்ளத்தை விட்டகலாது மேலோங்கி விளங்கி இடங்கொண்டருள்வன். கொள்ளவே நாமும் நன்றாக வாழ்ந்து இன்புற்றிருப்போம்.

(அ. சி.) வாழையும் சூரையும் - இன்பமும் துன்பமும் வந்து இருவினையால் வந்து. வன் துண்டம் செய்திட்டு - இன்ப துன்பங்களில்