1245
 

(ப. இ.) நன்னெறி நான்மை நற்றவத்தின் வழி நின்று வாய்த் தொண்டும் கைத்தொண்டும் வருந்தி வழாது புரியும் திருந்து சீரடியார் விரும்பில் சிவபெருமான் திருவடியே மறமாணுலகமுமாகும். அடியார் உள்ளம் பொருந்தில் அவன் திருவடியே புண்ணியப்பேற்றின் பொருவிலாவுலகமுமாகும். அவனருளால் உள்ளம் உரை உடல் மூன்றும் கள்ளமின்றித் திருந்துமே யானால் அவர்க்கு அச் சிவபெருமான் திருவடியே தீர்த்தமுமாகும். சிவனடியார் வேண்டுவன எல்லாம் சிவபெருமான் திருவடிக் கீழே பெறுவர். வேறு வேறு உலகங்களில் வேறு வேறு காலங்களில் பெறுவன அனைத்தும் ஒருவர் சிவபெருமான் திருவடிக்கீழ் ஒருகாலத்து ஒருங்கு பெறுவர். விரும்பில் என்பதற்கு விரும்புதலில்லாத என்றலும் ஒன்று. மறமாணுலகம்: வீரசுவர்க்கம்.

(அ. சி.) திருந்தில் - சன்மார்க்கத்தில் நின்றால்.

(14)

2954. வானக மூடறுத் தானிவ் வுலகினில்
தானக மில்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் 1றேனன்றே.

(ப. இ.) சிவபெருமான் தன்மெய்யடியார்க்குத் தன் எண்பெருங் குணங்களைப் பதிவித்தருள உன்னுவன். உன்னலும் ஆருயிர்கட்கு உடற்சார்பால் ஏற்படும் முக்குணமும் அக்கணமே நீங்கும். அதுவே இவ் வுலகில் வானகம் ஊடறுத்தல் எனக் கூறினர். கானக வாழையாகிய திருநெறிய திருத்தமிழின் செவ்விய பண்ணினை அன்புடன் பாடி அவனடிக்கீழ் அழுந்தி நிற்பார்க்குத் திருவடியின்பம் எளிதின் வந்துறும். அவன் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய பண்பினனாதலின் அவன் தனிப்பெரும் உண்மை யறிவின்ப வடிவினனாவன். அவன் திருவடி இன்பத்தேனினைப் பானகமாகப் பருகாநின்றேன். அவன் அருளறிவுப் பேரொளிப் பொருளாவன். அப் பொருளினை அருளால்பற்றி எங்கு மிலாததோர் ஈறில் இன்பம் வீறுபெற எய்தினேன். அதனையே பற்றி நின்றேன். கானக வாழை என்பதற்குக் குறிஞ்சி நிலத்து வாழை என்றலும் ஒன்று. இஃது உலகினைப்பற்றாது உடையானைப் பற்றுகின்ற உள்ளத்தூறும் தெள்ளத் தெளிந்த சிவனார் திருவடியின்பத்தேன் பற்றி நின்றேன்.

(அ. சி.) வானகம் - முக்குணம். தானகம் - அகம்பாவம். கானகம்... உள்ளுறும் - இசைக்கு வயப்பட்டு உள்ளத்தில் தோன்றும். பானகச் சோதி - ஆனந்த சொரூபனாகிய சிவன்.

(15)

2955. விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்ட தந்தமு மாமே.

(ப. இ.) தேவர், மூவர், மற்று யாவர்க்கும் அவரவர்தம் வினைக்கீடாகத் தன் திருவாணைவழி விதியமைக்கும் விதிப் பொருளாகவுள்ள விழுமியோன் சிவன். தூமாயைக் கண்ணுள்ளார் உறையும் சிவவுலகமாக


1. கந்தமலர்க். அப்பர், 6. 84 - 4.