வாழ்த்து வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் 1பாதமே. (ப. இ.) சிவகுருவே சிவனாதலின் வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி என்று ஓதியருளினர். அவன் செய்தருளிய சிறப்புத் திருவருவருள் மலமறுத்தலே. அதனால் மலமறுத்தான் பதம் வாழ்க என்றனர். மலமறுத்து நலமுற மன்னுவித்தது திருவடியுணர்வு. அதனால் மெய்ஞ்ஞானத்தவன்தாள் வாழ்க என்றனர். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனாதலின் மலமிலான் பாதம் வாழ்க என்று ஓதியருளினர். திருவடி, பதம், தாள், பாதம் நான்கும் ஒருபுடையொப்பாக நன்னெறிநான்மை நற்றவப்பேற்றினைக் குறிக்கும். இதனை, 'சீலமடி நோன்புபதம் தாள்செறிவு பாதமே, ஏலுமறி வாமால் இசை' என நினைவுகூர்க. இதன்கண் காணப்படும் வாழ்த்து எட்டினாலும் சிவபெருமானின் வான்குணம் எட்டும் குறிப்பாகக் குறிக்கப்படும் தனித் தமிழ் மாண்பின் இனித்த மாறா வனப்போர்க. இதனை, 'வாழ்த்தெட்டால் வள்ளல் சிவபெருமான் எண்குணமும், வாழ்த்து தமிழ் தாடலைவாழ் மாண்பு' என நினைவுகூர்க. திருச்சிற்றம்பலம். ஒன்பதாம் தந்திரம் முற்றும். தமிழ் மூவாயிர மூலமும், ஆசிரியர், ப. இராமநாதபிள்ளையவர்கள் விளக்கவுரையும், ஆசிரியர், அ. சிதம்பரனார் அவர்கள் குறிப்புரையும் முற்றுப்பெற்றன.
1. வாழ்க. சம்பந்தர், 3. 54 - 1. " கொடிநிலை. தொல். பொருள் - 88. " வாழ்த்தியல். " "421.
|