139
 

சிறந்த இயற்கைவடிவமைந்த இன்பத்தேறலை உண்ணுங்கள். அத்தேறல் திருவடியுணர்வினை உண்டாக்கும். தொன்மை மலத்தையும், சமயங்களிலுண்டாகும் பெரும் மயக்கத்தையும் போக்கக் கூடிய திருவருளுணர் வினையும் உண்டாக்கும். மேலும் இழிகாமும் அழிகள்ளும் தொன்மலத்தையும் சமய மயக்கத்தையும் உண்டாக்கும். நல்லறிவைப் போக்கும் எனவும் கொள்க. கலதி - தீக்குணமுடையார். இழிகாமம் - நல்லோரான் இழிக்கப்படும் காமம். அஃதாவது புறச் சூழலால் அறந்திறம்பி அகத்தெழும் காமம்; குறியாக் காமம் என்க. அழிகள் - ஒழுக்கமும் உணர்வும் ஒருங்கு அழிக்குங்கள். ஓ - சிறப்பு. மயம் - பெருமை. போம் மதியாகும் - கெட்டுப் போவதற்காம் காரறிவுண்டாம். மயவானந்தம் - ஆனந்த மயம்; அழிவில் பேரின்பம். காரறிவு - அறியாமை.

(அ. சி.) மாமலம் - மூலமலம்.

(3)

314. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக்1 குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர்2 அன்றே நணுகுவர் தாமே.

(ப. இ.) ஆற்றலாகிய சத்தியை வழிபடுவோர் வாமத்தோர் எனப்படுவர். இவர்கள் மயக்கநூல் வழிநின்று அறியாமையாற் கள்ளுண்பார்கள். அவர்கள் கள்ளுண்பது சத்திக்கு உவப்பைத் தருவதாகும் என்னும் தப்பு எண்ணமேயாகும். சத்திக்கு உவப்பைத் தருவது 'சிவானந்தத் தேறலே'யன்றி அறிவை மயக்கும் கள்ளன்று. இழிகாமமுடைய கீழோர் இணை விழைச்சு எனப்படும் உடனுறைவு அல்லது ஆண் பெண் இணக்கம் என்னும் உடலையும் உளத்தையும் உணர்வையும் தளரச் செய்யும் காமக் கள்ளுண்டு கலங்குவர். சிவ வழிபாட்டினுக்கு ஓமமும் ஒருங்கிய நினைவும் உறுப்புக்கள் எனப்படும் வழிபாடு உறுப்பி. ஓமம் தீ வளர்த்தல். ஒருங்கிய நினைவு தியானம். அவ்வகையான சிவ வழிபாட்டினர் உள்ளொளியாகிய சிவனடியுள் ஒடுங்கித் தம் உணர்வில் சிவ இன்பத் தேறலினை யுண்பர். நந்தி நாமமாகிய 'நமசிவய' என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தைத் திருவருளால் சிறப்புறக் கணிப்போர் அப்பொழுதே திருவடியுணர்வினை எய்துவர். காமத்தோர் - இன்ப நூலுடையார் வாமத்தோர்: சத்திக்குத் தனிப்பெரு முதன்மை கொடுக்கும் நெறியினர். இவர் சத்தியின் திரிபே உலகமும் உயிர்களும் எனக் கொள்ளும் ஒவ்வாக் கொள்கையினர்.

(அ. சி.) வாமத்தோர் - சத்தி பூசை யுடையோர். ஓமத்தோர் - சிவபூசை செய்பவர். நாமத்தோர் - அஞ்செழுத்தோபதுவார்.

(4)

315. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளண்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.3


1. பால் நினைந். 8. பிடித்த பத்து, 9.

2. ஆலைப்படு. அப்பர், 6. 52 - 2.

3. உட்கப். திருக்குறள். 921.