(ப. இ.) வான் வளி தீ நீர் நிலம் என்னும் ஐம்பூதங்களும், அவற்றை முறையே இயைந்தியக்கும் கண்காணித் தெய்வங்கள் அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐவரும் தோற்றக் கேடில்லாத திருவருளினாற்றலுடன் போந்தனர். இத் தோற்றத்தை அருள் வெளியாகிய மாகாயத்தில் தோன்றியதென்ப. அருளோன் ஆண்டான் அரன் அரி அயன் என்னும் இவர்களால் நாம் காணும் பருமையான வான் முதல் ஐந்தும் தோன்றின. அருளோன் - சதாசிவன். ஆண்டான் - ஈசுரன். (அ. சி.) காண அளித்தல் - புலனுக்குத் தோன்றுமாறு உண்டாக்கல். (20) 388. அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாம்அவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.1 (ப. இ.) தூமாயையின்கண் திருவருள் நிலைக்களமாம் முக்கோணம் தோன்றும். அதன்கண் வீற்றிருப்பவள் திரிபுரை என்று சொல்லப்படுவள். அருளோனாகிய சதாசிவத்திற்கு உடலாய் அமைவாள். அவள் படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிலையும் புரிவள். அவ்வைந்தொழிலும் அருளால் புரியப்படுவனவே. (அ. சி.) அளி - கருணை. முக்கோணம் வயிந்தவம் - முக்கோணச் சக்கரத்தில் உள்ள பீஜ எழுத்து. (21) 389. வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.2 (ப. இ.) தன் கண்ணை மறைக்கும் தன்மை வாய்ந்த கச்சுப்பூண்டு விளங்கும் திருவருள் அருளோன் நிலையில் மனோன்மணி எனப்படுவள். சிவன் நிலையில் மங்கலி எனப்படுவள். மங்கலம்: மாண்கலம் என்னும் சொல்லின் மரூஉ. மாண்கலம் பூட்டுவாரும் காப்பாரும் நலக்குரியாராவர். மாண்கலம் பூண்பார் நல்லாராவர். நல்லார் சிவஞானமுடையார். திருவருளம்மையே அனைத்திற்கும் வினைமுதற் காரணியாவள். காரியப் பொருள்களிற் கலந்து இயக்கலால் கலந்தவளும் ஆவள். இது படைத்தல். வாரணி - காத்தலைப் புரிபவள். ஆரணி - துடைத்தலைப் புரியும் காளி. வானவர் மோகினி - மறைத்தலைப் புரியும் ஆதி. பூரணி - அருள்தலைப் புரியும் திருவருள். போதம் - ஆருயிரின் சிற்றறிவினைப் புணர்ந்தியக்கும் அறிவுத் திருவருள். அதிபோதம் - இயற்கைப் பேரறிவுப் பெரும் பொருள். இங்ஙனம் எல்லாமாய் நிற்பவள் திருவருளம்மை. போதாதி போதம்: போதம் + அதிபோதம். போதம் - சிற்றறிவு. அதிபோதம் - பேரறிவு. (22)
1. படைப்பாதித். சிவஞான சித்தியார், 1. 2 - 34. 2. சத்தியாய் - சிவஞான சித்தியார், 2. 4 - 3.
|