329
 

775. நடுவுநில் லாமல் இடம்பலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

(ப. இ.) உயிர்ப்போட்டம் நடுநாடியில் நிற்றல்வேண்டும். அப்படி நில்லாமல் இடம் வலம் ஓடினால் அதனால் இறப்பு நேரும். அவ்வாறு இறப்பினைத்தரும் மூச்சோட்டத்தைச் சிவபெருமான் திருவடிக்கீழ் நிறுத்தில் மூலவாற்றல் எழும்பும். திருவருள் ஒளி ஆவியுடன் விளங்கும். அந்தணன் கூடின்: சிவபெருமான் சேரின்; இது, திருவடி மறவாநெறியான் வருவது.

(அ. சி.) நடுவுநில்லாமல் - சுழுமுனையில் நில்லாமல். அந்தணன் - சிவபெருமான். பணி - குண்டலி சத்தி. தீபம் - பிராணன் சென்று அடங்கும் சோதி.

(6)

776. ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளு முகுர்த்தமு மாமே.1

(ப. இ.) அகத்தவத்தோராகிய யோகிகள் ஆராயும் பொருள் பரவெளித்தாமரையில் விளங்கும் முழுமுதற்சிவனையேயாம். அதற்காகப் பயிலும் மூச்சுப்பயிற்சியும் பதினாறு (550) மாத்திரை என்ப. மன வொடுக்கத்தை யருளும் காரணப்பொருளும் அச் சிவனேயாம். வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, திங்கள், ஆண்டு முழுத்தம் முதலியவற்றின் காரணப்பொருளும் சிவபெருமானேயாம். அதனால் அகவை (ஆயுள்) மிகும் என்பதாம். மலர் - தாமரை. ஆதாரம் - ஒடுக்கும் சிவம். முகுர்த்தம் - முழுத்தம்.

(அ. சி.) பதினாறு - பதினாறு மாத்திரை (பூரக இலக்கம்).

(7)


17. வார சூலம்

777. வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

(ப. இ.) மறைப்பாற்றலின் கைப்படையாகிய முத்தலைவேல் (சூலம்) வரும் வழி வருமாறாகும்: திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கீழ்ப்புலம் (திசை) ஆகும். செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்காகும். ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மேற்காகும்.


1. ஊழியு. சம்பந்தர், 3. 107 - 7.