365
 

874. வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே.

(ப. இ.) பெரும் பேறாகிய சதாசிவ நாயனாரருளிய முன்னொடு பின் முரண்பாடில்லாத இறைவன் நூலாம் ஆகமம் முப்பொருள் நூலாகும். அவ்வாகமத்தின் வளப்பமிக்க துறையே மலமகற்றிச் சிவப்பேறாக்கும். அனைவர்க்கும் பொதுவாம் அம்பலத்தின்கண் நடிக்கும் திருக்கூத்தும் ஆகமவுயிராம் திருவைந் தெழுத்தாகும். கூததியற்றுவோனும் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவனாகும். மாறிலா - முரண்பாடில்லாத. வண்டுறை - வளப்பமிக்க துறை. புன்னையும்: புல் + நையும் - புல்லுமலமாகிய ஆணவம், தேயும். அமலம் - இயல்பாகவே பாசமின்மை. நெறிநூல் - வேதம். துறைநூல் - ஆகமம்.

(அ. சி.) சதாசிவம் மாறிலா ஆகமம் - சதாசிவ நாயனார் வெளியிட்ட மாறுபாடில்லாத ஆகமங்கள். அமலம் - சிவம்; நின்மல சிவம்.

(11)

875. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காமிடந் தானே.1

(ப. இ.) ஆவியின் மாட்டு முழுமுதற் சிவன் செய்யும் திருக்கூத்தைத் தமிழாகமமாம் திருவைந்தெழுத்தின் சீரிய முறையில் வைத்துக் கண்டால் பசு பாசங்கள் பதியின் நாட்டத்தால் முறையே பிணி வீடும் பிணியாமையுமாகிய தன்மையால் தூய்மையாகும். பிணிவீடு - கட்டினின்றும் விடுபடுதல். பிணியாமை - தம் வழியீர்க்கும் மலம் மாயை கன்மங்களில் மலம் அடங்கி விடுதலும் மாயை கன்மங்கள் ஆவியின் வழியொழுகுதலுமாம். மறைப்பாற்றலாகிய திரோதாயியும் திருவடியின்பம் கூட்டுவிக்கும் அருளாற்றலாக வனப்பெய்தும். ஆணவம் மாயை காமியம் என்னும் மூன்றும் மலம்மாயை கன்மங்களின் காரியங்களாகும்.

(12)

876. தானே தனக்குத் தலைவியு மாய்நிற்குந்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்குந்
தானே தனக்குத் தனமய மாய்நிற்குந்
தானே தனக்குத் தலைவனு மாமே.

(ப. இ.) முழுமுதற் சிவன் தானே தனக்கு ஆற்றலென்று ஓதப்படும் தலைவியுமாய் நிற்பன் தானே தனக்கு அழிவில் பெரும் செல்வமுமாக நிற்பன். தானே தனக்குச் சிவமயமாய் நிற்பன். தானே தனக்கு எல்லாம் வல்ல முதன்மையனாகவும் நிற்பன். தனம் - திருவடிச்செல்வம்.

(அ. சி.) தனமலை - பெரும் செல்வம். தலைவன் - பதி.

(13)


1. மாயா. சிவஞானபோதம், 4. 2 - 1.