368
 

(அ. சி.) நடம் இரண்டு - அற்புதம் ஆனந்தம். நளினம் - இன்பம். நடம் இரண்டு நமன் செயும் - பிரளயம் - சங்காரம் நமன் செயும் கூத்து. நடம் இரண்டு - பொது, அனவரதம் நகைசெயும் - சீவத்துவம் ஒழித்துச் சிவத்துவத்தை விளங்கச் செயும். செம்பு பொன்னே - செம்பைப் பொன்னாக்குதல் போன்றது.

(19)

883. செம்புபொன் னாகுஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் சிரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே.1

(ப. இ.) 'சிவய நம' என்னும் தமிழ் மந்திரமாம் திருவைந்தெழுத்தை இடையறாது நாடினால் செம்பு பொன்னாவது போல் உயிர் சிவமாகும். சிவமாதல்: சிவனால் ஆட்கொள்ளப்படுதல். அங்ஙனம் திருவருள் கூர்ந்தது சிவனருள். சிவனருள் மந்திரவித்து சிரீயும் கிரீயும் ஆகும், இதுவே திருவம்பலமாகும்.

(அ. சி.) சிரீயும் கிரீயும் - சத்தி பீச மந்திரங்கள்.

(20)

884. திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருவம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

(ப. இ.) சிறந்த திருவம்பலச் சக்கரத்தைத் திருவருள் திகழ்ந்து விளங்கும் பொருட்டு நீட்டத்தில் ஆறுவரையும் குறுக்கே ஆறுவரையுமாகக் கீறினால் இருபத்தைந்து அறைகள் உண்டாகும். அவ் விருபத்தைந்து அறைகளிலும் திருவெழுத்தைந்தையும் முறையாக அமைத்து அவற்றைக் காதலாற் கணித்தல்வேண்டும். கணித்தல் - செபித்தல்.

(அ. சி.) ஈராறு - குறுக்கு ஆறுவரை நெடுக்கு ஆறுவரை கீற திருவம்பலச் சக்கரமாம். இருபத்தஞ்சாக்கி - இருபத்தைந்து அறைகளாக்கி. திருவம்பலமாகச் செபிக்கின்றவாறு பஞ்சாக்கரங்களை மாறியிட்டுச் சிற்றம்பலச் சக்கரமாகக் கொண்டு செபிக்கின்ற விதம்.

(21)

885. வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

(ப. இ.) 'சிவயநம' என்னும் நுண்ணிய திருவெழுத்தைந்தையும் இடையறாது கணித்துக்கொண்டேயிருந்தால், அத்தகையோர்க்குப் பிறப்பில்லை. பெறுபேறாகிய திருவருளின் வலியால் திருவம்பலக் கூத்துக் காணலாம். கணிப்பின் பயனாக உயிர் திருவடியை அடையும். வாறு - பேறு. வாறு - வலிமை வாறு - ஆறு.

(22)


1. முன்னம். அப்பர், 6. 25 - 7.