(ப. இ.) அருளம்மை மணங்கமழ்கின்ற கொம்புபோலும் இடையினையுடையாள். குரும்பைபோன்ற திருமுலையை உடையவளும் அவளே. அவளே அருள் விளக்கத்துடன் திகழும் கன்னி; குங்குமநிறத்தினை உடையவள். தோட்டியும் கயிறும் உடைய திருக்கையினையுடையவளும் அவளே. எல்லாவுலகங்களிலும் நிறைந்துநிற்பவளும் அவளே. அவள் அடியார் அகத்தாமரையின்கண் வீற்றிருப்பவள். இவற்றை அடியவர்க்கு அத்திருவருள் உணர்த்த உணர்ந்து ஒழுகும் தன்மை அவர்க்கு எய்தும். அவர்தம் நெஞ்சகமே அம்மை உறையும் உறையுளாகும். (23) 1154. வாயு மனமுங் கடந்த மனோன்மனி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத் தாயும் மகளுநல் தாரமு மாமே1. (ப. இ.) மாற்றம் மனம் கழிய நின்ற மனோன்மனி அம்மை திருவடிபோற்றும் பேய்களும், பூதக்கூட்டங்களும் மிகுதியாகவுடைய பெண்பிள்ளை. தேர்வும் தெளிவும் எட்டாத சிவபெருமானுக்குத் தாய் மகள் மனைவியுமென்னும் முறைமையினையுடையளாவள். முப்பத்தைந்தாம் மெய் அன்னைமெய்; இதின் நின்றும் முப்பத்துநான்காவதாகிய அருளோன்மெய் தோன்றும். இந்நிலையில் தாயாவள். முப்பத்தாறாவதாகிய அத்தன் மெய்யினின்றும் முப்பத்தைந்தாவதாகிய அன்னை மெய் தோன்றும், இந்நிலையில் மகளாவள். முப்பத்துநான்காவதாகிய அருளோன் மெய் அருளும் (சத்தி) ஆண்டானும் (சிவன்) கூடிய சதாசிவ தத்துவமாகும். இந்நிலையில் மனைவியாவள். (1099) (அ. சி.) பேயுங் கரையும்-உயிர்க்கூட்டங்கள். (பிறப்பு எடுப்பதற்கு முந்திய நிலை). அரனுக்குத் தாய் - சத்தி தத்துவத்தினின்றும் சதாக்கிய தத்துவ வாசியாகிய சதாசிவமாகிய அரன் தோன்றுவதால் தாயாகியும்; மகள் - சிவதத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றுவதால் சிவத்துக்கு மகளாயும்; தாரம் - ஆதி சத்தியாகி நின்று சத்தி தத்துவத்தில் சதாசிவ நாயனாரோடும் கூடி இருந்து உலகமும் பல் உயிர்களும் தோற்றுவதற்கு ஏதுவாயிருத்தலால் தாரம் ஆயும் நின்ற அவசர பேதங்களை ஆய்ந்து அறிந்துகொள்க. (24) 1155. தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகுங் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே. (ப. இ.) சிவனுக்கு மனைவியாகநிற்கும் அருளம்மை, அவனுக்கு அறிவாற்றலாகவும் நிற்பள். இக் கலப்பு உலகத் தோற்றத்தின் காரண காரியத் தொடர்பாகும். அவளே தூமாயையுடன் நிறைந்து மறைந்
1. மின்னிடைச். 8. திருப்பொற் சுண்ணம், 13. " தவளத்த " திருக்கோவையார், 112. " சிவஞ்சத்தி. சித்தியார், 2. 4-27.
|